Sunday, May 04 11:56 am

Breaking News

Trending News :

no image

'கேப்டனுக்கு' வந்த சிக்கல்…! தொண்டர்களின் ஷாக் முடிவு…?


சென்னை: விஜயகாந்தை சந்திக்கவோ, கட்சி நிலைமையை பற்றி எடுத்து சொல்லவோ முடியாத நிலையில் பல முன்னணி நிர்வாகிகள் மாற்று கட்சிகளில் இணைய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெருத்த எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேமுதிக. கழகங்களுக்கு மாற்று, தமிழகத்தின் புதிய எழுச்சி, சக்தி என்ற முழக்கங்களுடன் தொடங்கப்பட்ட கட்சி இன்று அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. ஆரம்பம் நல்லாயிருக்கு… அதுக்கு அப்புறம் என்ன என்று கட்சியினர் கேள்வி கேட்கும் நிலைக்கு இப்போது ஆட்பட்டிருக்கிறது தேமுதிக.

கூட்டணி முடிவுகளில் தவறு, தேர்தல்களில் தோல்வி, கட்சியில் எழுந்த குடும்ப ஆதிக்கம் என பல குறுக்கீடுகளால் கட்சி கரைந்து கொண்டிருக்கிறது. 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் மற்ற கட்சிகளை விட தேமுதிகவுக்கு வாழ்வா?சாவா? என்று பார்க்கப்பட்டது. கடைசியில் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது.

கேப்டன் உடல்நிலை பாதித்த தருணத்தில் இருந்து மனைவி, மச்சான் தலையீடு ராக்கெட் வேகத்தில் ஸ்பீடாக அப்போது இருந்தே பலரும் தேமுதிகவில் இருந்து மாற்று கட்சிகளுக்கு பயணமாக ஆரம்பித்துவிட்டனர். 2016ம் ஆண்டு முதல்வர் வேட்பாளர் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் விஜயகாந்துக்கும், கட்சிக்கும் பலத்த அடி கிடைத்தது.

அந்த தோல்வியே கட்சியை அதலபாதாளத்தில் தள்ளிவிட்டது. பின்னர் 2021ம் ஆண்டு தேர்தலும் அவர்களுக்கு சறுக்கலாக அமைந்தது. இந்த தேர்தலில் தேர்தல் செலவுகளுக்கு கட்சி தலைமையை தேமுதிகவினர் எதிர்பார்க்க… தலைமையோ வேறு ஒரு வாக்குறுதி அளித்தது.

கையில் உள்ள காசை கொண்டு தேர்தல் பணியாற்றுங்கள், அனைத்தும் பின்னர் செட்டில் செய்யப்படும் என்று பலமான உறுதி அளிக்கப்பட்டதாம். அதை நம்பி பலரும் காசை போட்டு செலவு செய்து, தேர்தலில் படுதோல்வி அடைய இழந்த காசை கேட்டு பலரும் கட்சி தலைமையை அணுகி வருகின்றனராம்.

ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் கேப்டனை சந்திக்க முடியவில்லை, செலவு தொகையை கேட்டால் பொறுப்பற்ற பதிலும், அவமானமும் மிஞ்சுகிறது என்று கண்ணீர் விடாத குறையாக இருக்கின்றனராம் கட்சி நிர்வாகிகள். ஏதோ பேருக்கு சில தொகையை மட்டும் கொடுத்துவிட்டு எல்லாரையும் கட்சி தலைமை அம்போவென்று விட்டுவிட்டதாக தெரிகிறது.

தலைமையை அணுகினால் பதிலே இல்லையாம்… பிரேமலதாவையோ, சுதிஷையோ அணுகினால் அவர்களின் உதவியாளர்கள் பதில் அளிக்கின்றனராம். பணம் பற்றி கேட்டால் உரிய பதில் இல்லாமல் அவமானப்படுத்தப்பட்டு அனுப்புகிறார்களாம்… காசை செலவழித்துவிட்டு, கேப்டனிடம் எதுவும் கூற முடியாமல் தவியாய் தவித்து கிடக்கின்றனராம் முன்னணி நிர்வாகிகள்.

தொடர் நெருக்கடிகளால் சிக்கி உருளும் பல தேமுதிக முன்னணி நிர்வாகிகள் கட்சி தாவ ரெடியாகி இருக்கின்றனராம்… கேப்டனை நம்பி வந்தோம்… கட்சியை தொடர்ந்து நடத்துவீர்களா? இல்லையா..? இல்லை என்றால் கலைத்துவிடுங்கள் என்று கூறுகின்றனராம்.

முக்கிய நிர்வாகிகள் தமது உள்ளக்குமுறலை கடிதமாக வடித்து தலைமைக்கு அனுப்பி வருகின்றனராம். விவகாரம் சீரியசாக போவதை உணர்ந்து மாநில நிர்வாகிகள் சிலர் அதிருப்திக்கு ஆளானவர்களை தாஜா செய்யும் பணியில் இறக்கிவிடப்பட்டு உள்ளனராம். ஆனால் இதுவும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியாதாம்.

ஆக இப்போதைக்கு கட்சியின் எதிர்காலம் கண்ணுக்கு தெரியாத நிலையில் உள்ளது என்கின்றனர் கேப்டனின் உண்மை விசுவாசிகள். ஆனால் காலநேரம் வரும், அனைத்தும் மாறும் என்று தேமுதிகவினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Most Popular