நைட் ஒண்ணு.. காலையில் வேற…! ஈபிஎஸ்சுக்கு ‘கேட்’ போட்ட ஓபிஎஸ்…!
சென்னை: எடப்பாடியை தடுமாற வைக்கும் வகையில், ஓபிஎஸ் எடுக்கும் முடிவுகள் அதிமுக தொண்டர்களை யோசிக்க வைத்துள்ளது.
அதிமுக தலைமை கழகத்தில் இருந்து ஏப்.1ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் 7ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பது தான் அந்த அறிவிப்பு. பெரும் சவால்கள், இடைஞ்சல்களுக்கு மத்தியில் பொது செயலாளர் ஆசனத்தில் அமர்ந்த பின்னர் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் தொண்டர்கள் வேற லெவலில் உற்சாகத்தில் இருந்தனர்.
அதே நேரத்தில் கட்சியின் அமைப்பில் சில மாற்றங்கள் அவசியம் என்ற கருத்து மேலோங்க, ஏப்.3ம் தேதி மாசெ கூட்டம் ரத்து, அதற்கு பதிலாக செயற்குழு கூட்டம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாளே அந்த கூட்டமும் ரத்தானது.
முதல்நாள் அறிவிப்பு, அடுத்த 10 மணி நேரத்திற்குள் கூட்டம் ரத்து என்று ஈபிஎஸ் நடவடிக்கையில் அதிமுகவினர் குழப்பமும், அதிர்ச்சியுமாக உள்ளனர். ஆனால் இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றனர் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
அதாவது ஓபிஎஸ் எடுத்து வரும் மூவ்களை கண்டே இப்படிப்பட்ட ரத்து அறிவிப்புகள் வெளியானது கூறப்படுகிறது. செயற்குழுவில் ஒருவருக்கு ஒரு பதவி தான் என்ற புதிய ஸ்டைலை கொண்டு வர ஈபிஎஸ் திட்டமிட்டதாகவும், அதை சோர்ஸ் மூலம் அறிந்து ஓபிஎஸ் எதிர்வினையாற்ற தயாரானதாகவும் கூறப்படுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை தான் செயற்குழு, அதை நடத்த ஒரு வாரம் அவகாசம் கொடுத்து அறிவிக்க வேண்டும். ஆனால் இதற்கு நேர்மாறாக ஈபிஎஸ் கூட்டத்தை அறிவித்துள்ளதால் கோர்ட் படியேற பன்னீர் தரப்பு தயாரானதை அறிந்து செயற்குழு கூட்டத்தை ரத்து செய்ததாக கூறுகின்றனர்.
ஓபிஎஸ்சின் கோர்ட் நடவடிக்கைகள், ஆலோசனைகள் அறிந்த எடப்பாடி தரப்பு அடுத்த கணமே கூட்டத்தை ரத்து செய்தது என்பதே களநிலவரம் என்றும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஆக இப்போதைக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதல் என்பது முடிவுக்கு வராது என்றும் அவர்கள் கருதுகின்றனர்.