ஆளுநர், ரஜினி சந்திப்பில் இப்படி ஒரு டுவிஸ்ட்டா…? திகைக்க வைக்கும் பின்னணி காரணம்
சென்னை: அரசியல் பேசினேன் என்று கூறியதன் மூலம் தமிழக அரசியல் தம்மை சுற்றியே இயங்குகிறது என்பதை ரஜினி மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.
தலைநகர் சென்னையில் இன்று திடீரென அரசியல் களம் பரபரப்படைந்தது. சென்னையில் ஆளுநர் ரவியை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி பின்னர் அது நிஜம் என்றே ஆனது. டெல்லி சென்று ஆளுநர் மீண்டும் ஆளுநர் தமிழகம் வந்து 2 நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் ஆளுநரை ரஜினிகாந்த் சந்தித்து இருக்கிறார்.
சந்திப்பின் பின்னணி குறித்து வெளியான தகவல்கள் திகைக்க வைத்துள்ளது. ரஜினி ஆளுநர் சந்திப்பின் நேரம் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள். சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது ரஜினி கூறிய விஷயங்கள் தான் மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தான ஒன்று. ஆளுநருக்கு தமிழகம் ரொம்ப பிடித்துள்ளது. இங்குள்ள ஆன்மீக உணர்வு ரொம்பவும் பிடித்திருக்கிறது. குறிப்பாக தமிழக மக்களின் கடின உழைப்பு பிடித்து இருக்கிறது. தமிழகத்துக்காக உழைக்க தயாராக இருப்பதாக அவர் என்னிடம் கூறினார்.
ஆளுநருடன் நான் அரசியல் பேசினேன். ஆனால் நான் மீண்டும் அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் ரஜினி. ஆனால் இந்த மீட்டிங்கின் பின்னணியில் உள்ள காரணங்கள் தமிழக அரசியல் களத்தை உற்று பார்க்க வைத்துள்ளது.
ஆளுநர் ரவிக்கு தமிழக அரசியல் கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பு உள்ளது. குறிப்பாக ஆளும் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பு அரசியலை செய்து வருகின்றன. தமிழகத்தில் ஆளுநருக்கு எதிரான மனோநிலையில் மக்களும், அரசியல் கட்சிகளும் உள்ள விவரம் டெல்லி தலைமைக்கு முக்கியமாக நோட் போட்டு அனுப்பப்பட்டதாகவும், அந்த எதிர்ப்பை மட்டுப்படுத்தவே டெல்லி பாஜக தலைமை மூலம் ரஜினி களம் இறக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இல்லை என்றால் ரஜினி எதற்காக ஆளுநரை சந்திக்க வேண்டும்? அவருக்கான அவசியம் இதில் நிச்சயமாக இல்லை என்றும் தகவல்கள் கசிந்து இருக்கின்றன.
ஆளுநரை புகழ்ந்து ரஜினி போன்ற ஒரு நபர் புகழ்ந்தால் அவர் மீதான எதிர்ப்பு என்னும் சற்றே மாறும், அதனால் தான் ஆளுநர் ரவியை ரஜினி புகழ்ந்து பேசியதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த சந்திப்பு முழுக்க, முழுக்க டெல்லி பாஜக தலைமையின் டைரக்ஷனில் நடந்தது என்றும் தமது பட புரோமோஷனுக்கு ரஜினி செய்யும் காரியம் என்பது அபத்தமானது என்றும் டெல்லி தகவல்கள் கூறி உள்ளன.
ரஜினியின் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்பது 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கை கொடுக்கும் என்று பாஜக உறுதியாக நம்புகிறது. அதற்கான சாம்பிள் தான் இது… அடுத்து வரும் காலங்களில் இதுபோன்ற பல சந்திப்புகள் நிகழும் பாருங்கள் என்று கண்சிமிட்டுகின்றனர் இதனை நன்கு அறிந்தவர்கள்…!