ஸ்டாலின் ‘ஹிட்’ லிஸ்டில் முதல் ஆள்…! சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர்…!
சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஊழல் ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலினிடம் பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி புகார் அளித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் இருந்த தருணத்தில் அமைச்சர்கள் பற்றிய நீண்டதொரு ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலை ஆளுநரிடம் திமுக தரப்பு அளித்தது. சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திலும் திமுக ஆட்சி அமைந்தவுடன் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஸ்டாலின் கூறி இருந்தார்.
தற்போது திமுக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில் திமுக தயாரித்த ஹிட் லிஸ்டில் உள்ளவர்கள் விசாரணைக்கு ஆளாவார்கள் என்று கூறப்பட்டது. எப்போது அந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக தரப்பு பதைபதைப்புடன் தவித்து இருக்க இது தொடர்பான பிள்ளையார் சுழியை பால் முகவர்கள் சங்கம் ஆரம்பித்து வைத்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி ஊழல் பட்டியலை அளித்துள்ளார். இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்த போது, அவரது பினாமிகள் பேரில் ஆவினில் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளன. இந்த ஊழலில் 61 கோடி ரூபாய்க்கான ஆதாரங்கள் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆவினில் ஊழல் அதிகாரிகளை அகற்றினால் தான் இழப்பை சரி செய்ய முடியும். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.