ரூட்டை மாற்றுகிறதா பாமக…? வெடிக்க போகும் கூட்டணி கலகம்..?
சென்னை: உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமகவின் கூட்டணி கணக்கீடு பற்றிய ஒரு தகவல் தமிழக அரசியலை பரபரப்பாக்கி இருக்கிறது.
வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தியாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த கெடு தான் தமிழக அரசியல் கட்சி கூட்டணிகளின் கணக்கை மாற்றும் காரணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மற்ற கூட்டணிகளை விட அதிமுக, பாமக கூட்டணி பற்றி தான் அரசியல் களத்தில் சூடான பேச்சுகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதாவது ஊரக உள்ளாட்சி தேர்தல் என்ற களம் இந்த கூட்டணியை நிச்சயம் அசைத்து பார்க்கும் என்கின்றனர் இரு கட்சிகளின் அரசியலையையும் உன்னிப்பாக பார்ப்பவர்கள்.
அரசியல் களத்தில் தொடர்ந்து பொது பட்ஜெட் நிழல் அறிக்கை, வேளாண் நிதி நிழல் அறிக்கை என தனித்துவமாக தமது ஆளுமையை ஆழமாக பதித்து கொண்டே இருப்பவர் பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இப்போது 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து பாமக தலைமையகம் ஒரு கணக்கீட்டை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை… உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருக்கும் 9 மாவட்டங்களில் 7 வட தமிழகத்தில் இருப்பது தான் அனைத்து கணக்கீடுகளுக்கும் காரணம்.
இந்த 7 மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்கு தனித்துவம் வாய்ந்தது. உள்ளாட்சி தேர்தல் 7 மாவட்டங்களில் தான் பாமக நிறுவனர் ராமதாஸ் அதிக இடங்களை அதாவது 20 சதவீதம் பெறலாம் என்று கணக்கு போட்டுள்ளாராம். ஆனால் இந்த கணக்கை நிச்சயம் அதிமுக ஏற்காது என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். காரணம்… சட்டசபை தேர்தலில் வடக்கு மண்டலத்தில் அதிமுக, பாமக கூட்டணி அதிகம் வெல்லவில்லை. அங்கு திமுக கூட்டணி தான் அதிக தொகுதிகளை அள்ளியது. இத்தனைக்கும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை அப்போது இருந்த அதிமுக அரசு அறிவித்தது.
நிலைமை இப்படி இருக்கும் பட்சத்தில் பாமகவுக்கு 20 சதவீதம் இடங்கள் வாய்ப்பே இல்லை என்று கூறுகின்றனர் அதிமுக சீனியர்ஸ். 20 சதவீதம் என்பதை அதிமுக திட்டவட்டமாக ஏற்க மறுத்தால் ரூட்டை மாற்றவும் ராமதாஸ் தயங்க மாட்டார் என்கின்றனர் பாமகவின் நிலையை நன்கு அறிந்தவர்கள்… ஆக மொத்தம் கூடிய விரைவில் அரசியல் கூட்டணி கணக்குகளில் கழித்தலும், கூட்டலும் அரங்கேறும் என்று எதிர்பார்க்கலாம்…!