ஓபிஎஸ்சை காலி செய்த சட்ட திட்ட விதி 35..! கலங்கும் ஆதரவாளர்கள்
சென்னை: அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ்சை நீக்கி சட்ட திட்ட விதி 35ன் படி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழக அரசியல் களமே எதிர்பார்த்தபடி உச்சக்கட்ட காட்சிகள் அதிமுக பொதுக்குழுவில் அரங்கேறி இருக்கிறது. இடைக்கால பொதுச்செயலாளர், நிரந்தர பொது செயலாளர் பதவி ரத்து, ஓபிஎஸ்சுக்கு எதிரான நடவடிக்கை என அமளி துளி ரகமாகி இருக்கிறது.
முக்கிய திருப்பமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் சிறப்பு தீர்மானத்தை நத்தம் விஸ்வநாதன் கொண்டு வர…. அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
அந்த தீர்மானத்தின் விவரம் வருமாறு: கழகத்தை வழிநடத்த வேண்டிய பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கழகத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார். தான் கையெழுத்திட்டுக் கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக காவல்துறையில் புகார் கொடுக்கிறார்.
அம்மா ஆட்சியில் அங்கம் வகித்துவிட்டு இப்போது விளம்பரம் மூலம் அம்மா ஆட்சியின் முடிவுகளை களங்கப்படுத்துகிறார். தொடர்ந்து கட்சிக்கு எதிராக அவர் செயல்பட்டுக் கொண்டிருப்பதால்... சட்டதிட்ட விதி 35 இன்படி பொருளாளர் பொறுப்பு, கழக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்க இந்த பொதுக்குழுவில் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும் கழகத்தின் கோட்பாடுகளுக்கு எதிராகவும் கழகத்தை பலவீனப்படுத்தி வரும் ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் அவரவர் பொறுப்புகளில் இருந்து விடுபட்டும், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கவும் தீர்மானம் முன்மொழியப்படுகிறது. இவர்களுடன் கழக உறுப்பினர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற தீர்மானம் ஏகமனதுடன் கரவொலிகளுடன் நிறைவேற்றப்பட்டு உள்ளது.