தமிழக பாஜக எம்எல்ஏக்களுக்கு டெல்லி தலைமை கொடுத்த ‘ஷாக்’…!
தமிழக பாஜக எம்எல்ஏக்களை அமித் ஷா சந்திக்க மறுத்துள்ள விவகாரம் பெரிதாக பேசப்படுகிறது.
அண்மையில் முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 4 இடங்களில் பாஜக வென்றது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து எம்எல்ஏ பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. தேர்தல் முடிந்தாலும் முடிந்தது… ஜெயித்தவர்கள் பற்றிய பேச்சுகள் விட தேர்தல் செலவுக்கு கட்சி தலைமை தந்த பண விவகாரம் தான் பெரிய பேச்சானது.
கட்சியின் முக்கிய தலைவர் தேர்தல் செலவுக்கான பணத்தை பட்டுவாடா செய்யாமல் சுருட்டிக் கொண்டு போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளை எழுப்பிய பாஜக நிர்வாகிகள் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டனர்.
கட்சி, பண விவகாரம் என இந்த பிரச்னைகள் பற்றி தமிழக பாஜக தலைமை ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டது. ஆனால் இந்த பிரச்னை இப்போது டெல்லியை உஷ்ணமாக்கி இருப்பது தான் தமிழக பாஜகவில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது.
தமிழகத்தில் இருந்து வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்ஆர் காந்தி, சரஸ்வதி ஆகிய 4 பாஜக எம்எல்ஏக்களும் டெல்லி சென்றனர். இவர்களுக்கு தலைமை வகித்து சென்றவர் தமிழக பாஜக தலைவர் முருகன்.
பிரதமர் மோடியை 4 எம்எல்ஏக்களும் சந்தித்து பேசினர். தமிழகத்துக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள், தமிழக முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் பேசியதாக தமிழக பாஜக தலைவர் முருகன் கூறியிருந்தார். பிரதமருடன் சந்திப்பு முடிந்த பின்னர் 4 எம்எல்ஏக்களும் தமிழகம் வரவில்லை.
மாறாக… அவர்கள் டெல்லியில் தங்கியிருந்தனர். மற்ற தலைவர்களை சந்தித்தாலும், அமித் ஷாவை மட்டும் சந்திக்க முடியாமல் இருந்தனர். ஏன் இந்த தாமதம் என்பதற்கான காரணங்கள் மெல்ல, மெல்ல கசிய ஆரம்பித்து இருக்கின்றன.
கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அமித் ஷா, தமிழக பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரையும் சந்திக்காமல் தவிர்த்து வந்திருக்கிறார். அதாவது தமிழக பாஜக தலைமை மீது அவ ர் கடும் அதிருப்தியில் உள்ளாராம். கட்சி கொடுத்த பண விவகாரம் மீடியாக்களில் வந்தது, தேர்தல் பிரச்சாரத்தின் போது முக்கிய தலைவர்களின் நடவடிக்கைகள் என பல முக்கிய ரிப்போர்ட்டுகள் அவர் கைவசம் சென்றுள்ளதாம்.
அதை பார்த்த அமித் ஷா கடும் கொந்தளிப்பில் உள்ளாராம். ஆகவே தான் தமிழக பாஜக தலைமையையும், எம்எல்ஏக்களையும் சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் டெல்லியில் வேறு சில தகவல்களும் கசிய ஆரம்பித்து இருக்கின்றன.
மத்திய அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாம். அந்த பணிகளில் அமித் ஷா பிசியாக இருப்பதால் தமிழக பாஜக எம்எல்ஏக்களை சந்திக்க முடியவில்லை. அனைத்தும் முடிந்தபின்னர் வெகு விரைவில் இந்த சந்திப்பு நிகழும் என்று கூறப்படுகிறது.