பெயரை திடீரென மாற்றிக் கொண்ட ஓபிஎஸ் மகன்…! அதுதான் காரணமா..?
சென்னை: ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத் குமார் தமது பெயரை ரவீந்திரநாத் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார். 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு, ஈவிகேஎஸ் இளங்கோவனை வென்று எம்பியானார். தமிழகத்தில் மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோற்க, இங்கு மட்டும் அதிமுக வென்றது.
இந் நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தமது பெயரை ரவீந்திரநாத் என்று பெயர் மாற்றிக் கொண்டுள்ளார். செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரையிலான மத்திய அரசின் அதிகாரப்பூர்வ கெசட்டில் இந்த பெயர் மாற்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அந்த அறிவிப்பில், பெரியகுளம், தென்கரை வடக்கு அக்ரஹாரத்தில் வசிக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான பி. ரவீந்திரநாத் குமார் ஆகிய நான், என் பெயரை மாற்றியிருக்கிறேன். அதன்படி இனி நான், ‘பி. ரவீந்திரநாத் என்று அழைக்கப்படுவேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் வட்டாரத்தில் எங்கு சென்றாலும் அவரை எல்லோரும் ரவீந்திரநாத் என்று அழைக்கின்றனர். முழு பெயரையும் யாரும் கூறி அழைப்பது கிடையாது. அதே நேரத்தில் பிரபல நியூமராலஜி நிபுணரை சந்தித்து அவர் பேசி உள்ளார். அப்போது பெயர் மாற்றம் பற்றிய பேச்சு எழுந்ததாக கூறப்படுகிறது.
ஒரிஜனல் பெயரும், ஒருவரை அழைக்கும் பெயரும் ஒன்றாக இருந்தால் தான் பாசிட்டிவ் வைப்ரேஷன் என்று அவர் கூறியதாகவும், குமார் என்ற வார்த்தை தான் உங்களின் எல்லா செயல்களுக்கும் தடை என்று கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து தமது பெயரை மாற்றும் முடிவுக்கு வந்து, ரவீந்திரநாத் என்று மாற்றியிருக்கிறார்.
குறிப்பாக ரவீந்திரநாத் என்பதை ஆங்கிலத்தில் Raveendranath என்று இருந்தது. அதையும் இப்போது ரவிந்திரநாத் (Ravindranath) என்று மாற்றியிருக்கிறார். பெயர் மாற்றம் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்… அவரின் செயல்பாடுகள் தான் அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் என்கின்றனர் அவரது எதிர்க்கோஷ்டிகள்…!