இருவரில் ஒருவர்…! ஓபிஎஸ் அடிமடியில் கை வைக்கிறாரா ஈபிஎஸ்..?
சென்னை: ஓபிஎஸ் இடம் இருக்கும் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை காலி செய்ய ஈபிஎஸ் முடிவெடுத்து, அதற்கான நபர்களை டிக் அடித்து வைத்துள்ளராம்.
யார் பெரியவர்..? யாருக்கு கட்சி பதவி…? அதிகாரம் என சகல திசைகளிலும் ஈபிஎஸ், ஓபிஎஸ் டீம் அசுர வேகத்தில் வேலை செய்து வருகிறது. மாறி, மாறி கட்சி நிர்வாகிகளை நீக்கும் அறிவிப்புகள் நாள்தோறும் வெளியாகி கொண்டே இருக்கிறது.
இப்படி போட்டி நீக்க லிஸ்ட் வெளியாகி கொண்டே இருக்க… அடுத்தக் கட்டமாக முக்கிய ஆக்ஷனில் இறங்க உள்ளாராம் எடப்பாடி. அதாவது ஓபிஎஸ் இடம் உள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை பிடுங்குவது தானாம் அது.
நாளை எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி உள்ள ஈபிஎஸ் அதன் முடிவிலேயே புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் வகித்து வரும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியை பிடுங்கி வேறு ஒருவரும் அளிக்க முடிவு செய்யப்பட உள்ளதாம்.
அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் யார் அதற்கு சமமானவர் என்ற பேச்சுகளும் இப்போதே ஈபிஎஸ் ஆதரவாளர்களிடம் ஓடிக் கொண்டு இருக்கிறது. ஓபிஎஸ் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்துக்கே அதை தந்துவிடலாம் என்று ஈபிஎஸ் தரப்பு நினைப்பதாக தெரிகிறது.
நத்தம் விஸ்வநாதன், ஓஎஸ் மணியன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் அதிமுக எம்எல்ஏக்கள் வட்டாரத்தில் இருந்து கசிகின்றன. இவர்களை தவிர 3வது ஆக ஒருவர் பெயரும் உள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர் அவர்கள். அது.. திண்டுக்கல் சீனிவாசன்.
இவர்களில் ஒருவர் கட்டாயம் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்டாயம் அறிவிக்கப்பட உள்ளனர் என்றும், எடுக்கப்பட்ட முடிவுகள், நியமனம் பற்றி சபாநாயகருக்கு உரிய முறையில் கடிதம் அனுப்பப்படும் என்றும் எம்எல்ஏக்கள் வட்டாரத்தில் கூறுகின்றனர். ஆக மொத்தத்தில் ஓபிஎஸ் இடம் உள்ள ஒவ்வொரு பதவியையும், கனக்கச்சிதமாக காலி செய்யும் ஈபிஎஸ்சின் திட்டமே என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்…!