Sunday, May 04 12:39 pm

Breaking News

Trending News :

no image

ஆக. 2ல் பள்ளிகள் திறப்பு…! ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அதிரடி ஆர்டர்


சென்னை: வரும் 2ம் தேதி முதல் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என்று அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை ஓய்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தினசரி பாதிப்புகள் பல நகரங்களில் குறைந்துவிட்டதாக தெரிகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக சகஜ நிலைக்கு திரும்பி விட்டதால் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் வரும் 2ம் தேதி முதல் நாள்தோறும் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

2021 - 22 கல்வி ஆண்டிற்கான பள்ளி மாணவர் சேர்க்கை பணிகளை அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக, ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டும்.

தற்போது மாணவர்கள் சேர்க்கை பணி, பள்ளிக்கால அட்டவணை தயாரித்தல், விலையில்லா பாட புத்தகங்கள் மற்ரும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல், பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் வழங்கி அவற்றை மதிப்பீடு செய்தல், மதிப்பீடு செய்த விபரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் போன்ற பணிகளை மெற்கொள்ளும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிந்து பணிபுரிய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், இதயநோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருப்பவர்கள் மட்டும் உரிய ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில் பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular