கதறி, கதறி… அழுத ராமதாஸ்..! தொண்டர்கள் ஷாக்
சென்னை: தமது பிறந்த நாளில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கதறி அழுத சம்பவம் தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
மூத்த அரசியல் ஆளுமைகளில் ஒருவர் டாக்டர் ராமதாஸ். அவருக்கு இன்று பிறந்த நாள். அவரது இந்த பிறந்த நாளை தமிழகம் எங்கும் உள்ள தொண்டர்கள் கொண்டாடினர்.
அரசியல் தலைவர்கள், சமூக நல அமைப்பினர் உள்ளிட்ட பலர் ராமதாசுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். வாழ்த்து மழைகளிடையே தமது சொந்த ஊரான கீழ் சிவிரி கிராமத்துக்கு ராமதாஸ் இன்று சென்றிருக்கிறார்.
இந்த கிராமம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ளது. இங்குள்ள பள்ளியில் படித்த அவர் பின்னர் சென்னை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தார். படிப்பு முடிந்து ஏழை, எளிய மக்களுக்கு வைத்தியம் பார்த்து சமூக அரசியலில் கலந்து வன்னியர் மக்களுக்காக போராட தொடங்கினார்.
இன்று பிறந்த நாளை கொண்டாடும் அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு தமது சொந்த ஊருக்கு தொண்டர்களுடன் சென்றார். தமது கிராமத்தில் 84 வயதை நினைவு கூரும் வகையில் 84 அடி உயர பாமக கொடியை ஏற்றினார்.
ஊர்மக்கள் அவருக்கு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு தர, ராமதாஸ் திக்குமுக்காடி போனார். தமது வீட்டுக்கு சென்ற அவர் அங்கு பெற்றோரின் போட்டோவுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சற்றே உணர்ச்சிவசப்பட்ட அவர், கண்ணீர் விட்டு அழுதே விட்டார்.
திடீரென ராமதாஸ் கண்ணீர்விடுவதை கண்ட பாமகவினர் ஒரு கணம் திகைத்து போயினர். பின்னர் அவரை ஆறுதல்படுத்தினர். ராமதாசின் இந்த உணர்ச்சிமிக்க தருணங்கள் வீடியோவாக இணையத்தில் வைரலாகி உள்ளது.