மரியாதை முக்கியம்..! ஐபேக் நிறுவனத்தை ‘வெளுத்த’ ஸ்டாலின்..!
சென்னை: ஐபேக் நிறுவனத்தின் எதேச்சதிகார போக்கை கண்ட திமுக தலைவர் ஸ்டாலின் கொந்தளிக்க, மிரண்டு போய் இருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.
திமுக தமது சட்டசபை தேர்தலுக்கான பணிகளை என்றோ தொடங்கி விட்டது. ஐபேக் நிறுவனத்துடன் தேர்தல் பணிகளுக்காக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அதன்பிறகு நடக்கும் சமாச்சாரங்கள் ஸ்டாலினுக்கு திருப்தியாக இல்லை என்பது தான் லேட்டஸ்ட் தகவல்.
ஐபேக் நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்தான போதே திமுகவின் முக்கிய மற்றும் மூத்த நிர்வாகிகள் பலருக்கு பிடிக்கவில்லை என்பது ஊரறிந்த உண்மை. திமுகக்காரனுக்கு தெரியாத களப்பணியா? வட நாட்டு ஆசாமி தான் வந்த கத்து தரணுமா? என்று நேரிடையாக தலைமையிடம் கொதித்தவர்கள் ஏராளம்.
அவர்களை கட்சி தலைமை அமைதிப்படுத்தினாலும், அவர்களின் ஆற்றாமை குறையவில்லை என்பது தற்போது அறிவாலயத்தில் இருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஒரு சர்வே எடுத்துக் கொடுத்துவிட்டு, அதன் அடிப்படையில் 234 தொகுதி வேட்பாளர் பட்டியல் என்று ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறது பிரசாந்த் கிஷோர் டீம்.
அந்த ரகசிய வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளவர்களை கண்காணிக்கும் வேலைகள் இருந்தாலும் மற்ற தேர்தல் பணிகளில் பிகே டீம் இன்னும் வேகம் எடுக்கவில்லை என்பது தான் ஸ்டாலினின் கோபத்துக்கு காரணம் என்று தகவல்கள் கூறுகின்றன.
நாட்கள் நகர,நகர.. ஐபேக் என்ன செய்கிறது என்று நேரிடையாகவே பிகேவிடம் கேட்டுவிட்டாராம் ஸ்டாலின். அதற்கு வந்த பதிலால் கொதித்து, லெப்ட், ரைட் என்று ஐபேக்கை விளாசி இருக்கிறார். கட்சியின் மா.செ.க்கள், ஐடி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரிடம் களப்பணிகள், புள்ளி விவரங்கள் என எது கேட்டாலும் கைக்கு வந்து சேருவதற்குள் போதும், போதும் என்று ஆகி விடுகிறதாம்.
கிடைக்கும் அரைகுறை டீடெய்ல்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதிலேயே காலம் போகிறதாம். இது தவிர, திமுகவின் முன்னணி நிர்வாகிகள் ஒத்துழைப்பது இல்லை என்று ஐபேக் ராகம் பாட… இதுபற்றியும் ஸ்டாலின் விசாரித்திருக்கிறாராம். ஆனால், , பிகே டீம் கட்சியினரை மதிப்பதே இல்லை, மரியாதையும் தருவது இல்லை என்று ஆதாரங்களுடன் ஸ்டாலினுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுள்ளதாம்.
அனைத்தும் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், பிகேவை அழைத்து கட்சியினருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டியது உங்கள் கடமை.. எனக்காகவும், கட்சிக்காகவும் எதையும் இழக்க தயாராக உள்ளவர்களை மதிப்பது அவசியம்… மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்று லேசுபாசாக கூறி இருக்கிறாராம் ஸ்டாலின். வழக்கமாக பதிலுக்கு பதில் பேசும் பிகே, இம்முறை அனைத்தையும் பக்குவமாக கேட்டுக் கொண்டுள்ளாராம். இனி… அனைத்தும் சரியாகிவிடும்… நோ ப்ராப்ளம் என்பது தான் அறிவாலயத்தில் இருந்து இப்போத வெளியாகி இருக்கும் தகவல்…!