40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவுக்கு தாவ ரெடி…! அப்பாவு ‘பிளாஷ்பேக்’
சென்னை; அதிமுகவில் 40 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு தாவ தயாராக இருந்த பரபர தகவலை சபாநாயகர் வெளியிட்டு அரசியல் அரங்கை அதிர வைத்திருக்கிறார்.
எழுத்தாளர் இரா. குமார் எழுதிய நடையில் நின்றயர் நாயகன் என்னும் நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த நூல் திமுக ஆட்சியின் சிறப்பு பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. நூல் வெளியீட்டு விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் தங்கம் தென்னரசு புத்தகத்தை வெளியிட்டார். அதை திமுக எம்பி தயாநிதி மாறன் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது; முதலமைச்சர் ஸ்டாலின் கொள்கை பிடிப்பு சாதாரணமானது அல்ல. அவர் அதிக கொள்கை பிடிப்பு கொண்டவர். இதற்கு உதாரணமான சம்பவத்தை இங்கு கூறுகிறேன்.
ஜெயலலிதா மறைந்த தருணத்தில் அதிமுக உடைந்தது. அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். டிடிவி தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அப்போது நண்பர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 40 திமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக உள்ளதாக அவர் தூது விட்டார். நான் உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிவித்தேன்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட அவர், இந்த 40 எம்எல்ஏக்கள் உதவியுடன் ஆட்சியமைப்போம் என்று நினைத்துவிட்டீர்களா? ஒருபோதும் நமக்கு தேவையில்லை… மக்களிடம் செல்வோம், அவர்கள் அதிகாரத்தை ஆட்சி அமைப்போம், நமக்கு தேவையில்லை என்றார்.
அப்படிப்பட்ட உறுதியான கொள்கை பிடிப்பு கொண்டவர் தான் முதலமைச்சர் ஸ்டாலின் என்று அப்பாவு பேசினார்.