தமிழகத்துக்காக ஸ்டாலின் செய்யும் சூப்பர் காரியம்…? அதுவும் வெளிநாட்டில்…?
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் லண்டன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழக முதலமைச்சரின் 2 நாள் டெல்லி பயணம் எதிர்பார்த்ததை விட வெற்றி பயணமாக அமைந்திருக்கிறது. முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறை தலைநகர் டெல்லி பயணம் என்பதால் மிக சிறப்பாக திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டு இருந்தது.
டெல்லியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை சந்தித்தார்… 25 நிமிடங்கள் பேசினார்.. 30 கோரிக்கைகள் அடங்கிய மனுவை தந்துவிட்டு, அவர் அளித்த உறுதியையும் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நீட் தேர்வு, சிஏஏ சட்டம், 8 வழிச்சாலை என தமிழகத்துக்கு தேவையான, தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றுவது குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் விளக்கி பேசினார். அதனை தொடர்ந்து கலைஞர் வழியில் கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்தித்து விட்டு சென்னை திரும்பி இருக்கிறார். ஸ்டாலினின் டெல்லி பயணம் எதிர்பார்த்ததை விட வெற்றி என்று அனைவரும் பேசி வரும் நிலையில் அவரது பயண திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஸ்டாலின் விரைவில் லண்டன் பயணிக்கிறார். அவரது லண்டன் பயணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
லண்டனில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் என்றும், தமிழகத்துக்கு முதலீட்டை ஈர்க்க அவர் லண்டன் பறக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவரது பயணத்துக்கான அனுமதியும் கிடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.