பாஜகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்…? எடப்பாடி டீமில் முக்கிய விக்கெட் காலி
டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் நாளை இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
திமுக ஆட்சியில் அமர்ந்த தருணத்தில் இருந்தே அதிகளவு அக்கட்சியினரால் உச்சரிக்கப்பட்ட பெயர்கள் 2. இரண்டு பேரும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள். அவர்களில் ஒருவர் ராஜேந்திர பாலாஜி, மற்றொருவர் வேலுமணி.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் 8 பேர் கொண்ட பட்டியலை வைத்துக் கொண்டு அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அக்குவேர், ஆணிவேராக திமுக அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த 8 பேர் மீதும் எப்போது வேண்டுமானாலும் ரெய்டு, கைது நடவடிக்கை பாயலாம் என்று தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.
ஆனால் நிலைமைகள் வானிலை நிலவரம் போல மாறி, மாறி இருக்க எப்போது அனைத்து அதிரடி நடவடிக்கைகளும் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு திமுகவில் உள்ளவர்களுக்கு தோன்ற ஆரம்பித்து உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இப்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார். கட்சி, ஆட்சி என இவர் மீதான விமர்சனங்களுக்கு பஞ்சமே இல்லை. அதிமுக ஆட்சியில் மோடி எங்கள் டாடி என்று பேசி பாஜகவையே தெறிக்கவிட்டவர்.
மஞ்சள் சட்டை, கைகளில் ஏகப்பட்ட கலர் கயிறுகள் என பாஜக உறுப்பினர் போன்று ஒரு அதிமுக அமைச்சர் பேசுகிறார் என்றால் அது வேறு யாருமல்ல… ராஜேந்திர பாலாஜி என்று தான் கடந்த அதிமுக ஆட்சியில் பேசும் அளவுக்கு அவரின் நடவடிக்கைகள் இருந்தன.
இப்படி அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் என இருந்து வரும் ராஜேந்திர பாலாஜி மதுரையில் இருந்து டெல்லி சென்றிருக்கிறார். நாளை காலை 11 மணியளவில் அவர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆவின் ஊழல் முறைகேடு தொடர்பாக அவர் மீது கைது நடவடிக்கை எப்போது வேண்டுமானாலும் பாயலாம் என்ற தகவலால் ராஜேந்திர பாலாஜி மிரண்டு இருப்பதாகவும், தமக்கான பாதுகாப்பு என்பது இனி அதிமுகவில் இல்லை என்றும் நினைத்து உள்ளார் என்று அவரது தரப்பில் இருந்து தகவல்கள் கூறுகின்றன.
அதன் காரணமாக, பாஜகவில் இணைந்தால் மட்டுமே அனைத்தையும் எதிர்கொள்ள முடியும் என்ற மனோநிலையில் டெல்லி போய்விட்டார் என்றும் தகவல்கள் கசிந்து இருக்கின்றன. தமது வேண்டிய, நெருக்கமான ஒன்றிய செயலாளர்களிடம் சொத்து குவிப்பு வழக்கு டெல்லியில் வழக்கறிஞரை சந்திக்க போவதாக கூறி உள்ளதாகவும், தமது உதவியாளரிடம் வடமாநிலத்தில் உள்ள கோயிலுக்கு போவதாகவும் கூறி இருக்கிறாராம்.
அனைத்தும் எந்தளவுக்கு உண்மை என்று தெரியாத பட்சத்தில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பாஜகவில் இணையவே சென்றிருக்கிறார் என்று கூறுகின்றனர் பாஜகவினர். காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் டெல்லியில் தான் உள்ளார், நாளை காலை இணைப்பு கன்பார்ம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. எது உண்மை என்பது நாளை தெரிந்துவிடும் என்பதால் அதுவரை அனைவரும் காத்திருக்கக்தான் வேண்டும்….!