பண்ணை வீடு… ஓட்டல் சாப்பாடு…! இப்படித்தான் சிக்கினார் மாஜி மணிகண்டன்…!
பாலியல் புகாரில் தலைமறைவான அதிமுக மாஜி அமைச்சர் மணிகண்டன் செல்போன் சிக்னல் உதவியுடன் பொறி வைத்து பிடித்துள்ளனர் போலீசார்.
5 வருஷமாக என்னுடன் குடும்பம் நடத்தினார்… 3 முறை கருக்கலைப்பு, திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டால் கொலை மிரட்டல் என அதிமுக மாஜி அமைச்சர் மணிகண்டன் மீது பரபர குற்றச்சாட்டுகளை கூறியவர் துணை நடிகை சாந்தினி.
நாடோடிகள் படத்தில் நடித்த இவரின் புகார் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாந்தினி சொல்வதில் உண்மையில்லை… பணம் பறிக்க அவர் போடும் திட்டம் என்று கூறிய மணிகண்டன், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அது தள்ளுபடியாக உடனடியாக போலீசார் கைது நடவடிக்கைக்கு தயாராகினர்.
இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த மாஜி மணிகண்டன் முதலில் மதுரையில் தலைமறைவாக இருந்ததாக தகவல் கிடைத்தது. அதன் பின்னர் மதுரை, ராமநாதபுரம் பகுதிகளுக்கு தனிப்படை அனுப்பி வைக்கப்பட்டது. மணிகண்டன் சிக்காததால், அவரின் செல்போன் எண்ணை வைத்து ட்ரேஸ் செய்யும் முயற்சியில் போலீசார் களம் இறங்கினர்.
நண்பர்கள் உதவியுடன் மணிகண்டன் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக உறுதியான தகவல் போலீசாருக்கு கிடைத்தது. செல்போன் சிக்னலை ட்ரேஸ் செய்த சைபர் க்ரைம், பெங்களூரு எலக்டரானிக் சிட்டியை அடுத்துள்ள கெப்பகோடி என்ற பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.
அதன்பிறகு கச்சிதமாக தனிப்படை சுற்றி வளைத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவருக்கு ஓட்டலில் உணவு வாங்கி கொடுத்து, சென்னைக்கு அழைத்து வந்திருக்கின்றனர். அவரிடம் நடத்தப்படும் அடுத்தக்கட்ட விசாரணையின் மூலம் மேலும் பல உண்மைகள் வெளியாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.