கொரோனா நோயாளிகள் உயிர் காக்க…! ‘மாஸ்’ உத்தரவு போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!
சென்னை: கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று முதலமைச்சர் ஸ்டாலன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க தடுப்பு நடவடிக்கைகளும் வேகம் எடுத்துள்ளன. அனைத்து பகுதிகளிலும் அமைச்சர்கள் ஆய்வு, அவர்களுக்கான சிகிச்சை, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்குதல் என நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன.
அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துகள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. நாள் ஒன்றுக்கு 7000 மருந்துகள் மட்டுமே விற்கப்படும நிலையில் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. தினமும் 30 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் நோயாளிகள் இருக்கும் போது இந்த மருந்துகள் போதுமானது இல்லை என்ற புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது.
அதேநேரத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்கான டிமாண்டை புரிந்து கொண்ட பலர் அதை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பதும் அரங்கேறியது. இந்த நடவடிக்கையில் மருத்துவர்களும் இறங்கி இருப்பது தெரிய வர பொதுமக்களும் நோயாளிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந் நிலையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று முதலமைச்சர் ஸ்டாலன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினாலும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் காலத்தில் ரெம்டெசிவிர், ஆக்சிஜன் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்பது கடுமையான குற்றம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க தொய்வின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.