தனியாக ஜெயித்த துரைமுருகன்..! எவ வேலுவை சாய்த்த டிஆர் பாலு..! திமுகவின் உட்கட்சி ரேஸ்
சென்னை: திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க. அன்பழகன் கடந்த மார்ச் 7ம் தேதி காலமானார். 43 ஆண்டுகளாக அவர் திமுகவில் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். அவர் மறைந்ததால் அந்த பதவிக்கு புதிய நபர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய சூழல் எழுந்தது.
திமுகவில் நிலைமை இப்படி இருக்க, புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய பொதுக்குழுக் கூட்டம் வரும் 9ம் தேதி நடைபெறும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அப்போது பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
ஸ்டாலினின் இந்த அறிவிப்பை அடுத்து, கட்சியின் அடுத்த பொதுச் செயலாளர் யார்? பொருளாளர் யார் என்ற பரபரப்பு எழுந்தது. அதற்கு இப்போது விடை கிடைத்து இருக்கிறது. புதிய பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் பின்னணியில் பல சுவாரசிய தகவல்கள் ஓடுகின்றன. பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் தவிர்த்து மேலும் பலர் போட்டியிடுவதாக அறிவாலய தகவல்கள் கசிந்தன. அதாவது டிஆர் பாலு, எவ வேலு, ஆ. ராசா ஆகியோர் களத்தில் உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் பொருளாளர் பதவிக்கோ, இன்னபிற முக்கிய பதவிகளுக்கு நான் போட்டியிட போவதில்லை என்று ஆ. ராசா அறிவித்துவிட்டார். இதையடுத்து, பொதுச்செயலாளர் பதவிக்கு காத்திருந்த துரைமுருகன் ரூட் கிளியராகி விட்டதாக கட்சியினர் கிசுகிசுக்கின்றனர்.
ஏற்கனவே துரைமுருகன் தான் பொதுச் செயலாளர் என்று அறிவிக்கப்படாத ஒரு தகவல் கடந்த 4 மாதங்களாக ஓடிக் கொண்டிருக்க அவருக்கு கொடுத்து விடலாம் என்று ஸ்டாலின் முடிவெடுத்துவிட்டாராம். இதுஒரு புறம் இருக்க பொருளாளர் யார் என்பதில் அடுத்த போட்டி ஆரம்பமானதாம்.
அதில், கட்சியின் சீனியரான டிஆர் பாலு முந்திவிட்டதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது. அதாவது, எவ வேலு இந்த ரேசில் இருந்து ஒதுங்கிவிட்டதாக தெரிகிறது. அதற்கு ஒரே காரணம்.. தாம் அதிமுக, ஜானகி அணி, பாக்யராஜ் கட்சி என்று பல கட்சிகளுக்கு சென்று கடைசியில் திமுகவில் ஐக்கியமானது தானாம்.
மாற்றுக்கட்சியில் இருந்து வந்த ஒருவருக்கு கட்சியின் முக்கிய பதவிகளில் ஒன்றான பொருளாளர் பதவியா? என்று கேள்விக்கணைகள் ஸ்டாலினிடம் தொடுக்கப்பட்டதாம். திமுகவில் வலுவான செலவு பார்ட்டியான எவ வேலு, கட்சியின் வேறு பதவிக்கு வேண்டுமானாலும் குஸ்தி போடட்டும், இந்த பொருளாளர் பதவிக்கு வேண்டாம், கட்சி நிர்வாகிகள் என்ன நினைப்பார்கள் என்று மூத்த நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவிக்க.. கடைசியில் பொருளாளர் பதவி டிஆர் பாலுவுக்கு என்று முடிவாகி உள்ளதாம்.
ஆனால் இந்த முடிவுகள் எல்லாம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை யாரும் ‘மூச்’ காட்ட வேண்டாம் என்று ஸ்டாலின் தரப்பில் இருந்து நிர்வாகிகளுக்கு கட்டளையே பிறப்பிக்கப்பட்டதாம். ஆனால், இந்த விஷயம் நாம் சொல்லாமல் விட்டால், மீடியாக்காரர்களுக்கு தெரியாமல் போய்விடுமா என்று சிரிக்கின்றனர் உடன்பிறப்புகள்…!!