பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவித்த தமிழக அரசு…! ஆனா.. அதில் ஒரு டுவிஸ்ட்
சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் முதல் பள்ளிகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து காணப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு குறைந்திருந்தாலும் கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில பாதிப்பு மீண்டும் உயர ஆரம்பித்து உள்ளது. தற்போது மீண்டும் ஒரு நாள் பாதிப்பு 2 ஆயிரத்தை எட்ட ஆரம்பித்து இருக்கிறது.
இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் வரும் 23ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொது மக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி , மற்றும் ஞாயிறு கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தளங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது.
இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
பல மாதங்களாகத் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்குக் கிடைக்காத சூழ்நிலையில் உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அனைத்து தரப்பு கருத்துக்களையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் வரும் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் பள்ளிகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பள்ளிக்கல்வித் துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனியாகப் பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த ஊராட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் கடைகள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.