‘பைல்’ ரெடி.. சிக்கும் 2 அதிமுக முக்கிய மாஜிக்கள்…? ஸ்டாலின் ஆக்ஷன்…!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆட்சியில் அமர்ந்தவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் முறைகேடு முதலில் கையில் எடுக்கப்படும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று. ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை தான் இப்போது முதல் பணி என்று அனைத்து அமைச்சர்களையும் களத்துக்கு அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின்.
இப்போது ஓரளவு கொரோனா தொற்றுகள் குறைந்து வருகின்றன. எதிர்பார்த்தபடியே அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல்கள், ஆதாரங்களை லிஸ்ட் எடுக்க சொல்லி இருக்கிறாராம் முதல்வர். அந்த பட்டியலில் முதல் பெயராக இருப்பது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தானாம்.
அதிமுக ஆட்சியில் இவரது நடவடிக்கையே குறிப்பாக பேச்சும், பேட்டியும் ஒரு தினுசாக இருந்தது பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது. சொந்த கட்சியால் அதிக முறை விமர்சிக்கப்பட்டவர் யார் என்றால் அது இவராக தான் இருக்கும்.
திமுகவை சதா விமர்சித்தும், ஸ்டாலினை தனிப்பட்ட முறையிலும் திட்டியவர் இந்த ராஜேந்திர பாலாஜி. அவரது பேச்சுகள் பின்னர் இணையத்தையே ஆக்கிரமிக்கும். ராஜேந்திர பாலாஜியின் அட்ராசிட்டி பேச்சை கண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் ஒரு முக்கிய விஷயத்தை கூறினார்.
அவரை பார்த்தால் பபூன் நினைவு தான் வருகிறது… இவருக்கு ஓட்டு போடக்கூடாது என்று வாக்கு கேட்க வந்திருக்கிறேன் என்று பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை கையில் எடுத்து அவரை ஜெயிலுக்கு அனுப்புவது தான் முதல் வேலை என்று கூறினார்.
திமுக வென்று ஆட்சியில் அமர்ந்தவுடன் எப்போது பைல் தூசு தட்டப்படும், நடவடிக்கை எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா என்றும் கொடிய வைரஸ் உள்ளே புகுந்ததால் அதற்கு சற்று தாமதமாகி விட்டதாக தெரிகிறது. இப்போது தொற்று குறைந்திருப்பதால் ஊழல் முறைகேடுகள் பட்டியலை கையில் எடுக்கும் நடவடிக்கைகளில் முதல்வர் ஸ்டாலின் களம் இறங்கி இருக்கிறராம்.
அதில் முதல் பைல் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வகித்த துறையில் இருந்து தான் என்று கோட்டையில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆவின் பால் முறைகேடு, பினாமி சொத்துகள் என கிட்டத்தட்ட 61 கோடி ரூபாய்க்கு ஏற்கனவே ஆதாரங்களை பால் முகவர் சங்க தலைவர் பொன்னுசாமி அளித்ததும் ரொம்ப கவனமாக ஆராயப்படுகிறதாம்.
எப்படியும் தம்மை நோக்கி திமுக அரசின் நடவடிக்கைகள் பாயும் என்று தெரிந்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ராஜேந்திர பாலாஜி தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் தவிர முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி என மேலும் சிலரின் ஊழல் முறைகேடுகள் குறித்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறதாம். விரைவில்… அனைத்து பைல்களும் ஆராயப்பட்டு நடவடிக்கை புயல்வேகத்தில் பாயும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.