திமுக வலையில் சிக்கப்போகும் எடப்பாடியின் வலதுகரம்…? அதிர்ச்சியில் கொங்கு மண்டலம்
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறிஉள்ளது, அதிமுகவை அதிர வைத்துள்ளது.
ஆட்சியில் அமர்வோம்…. அமர்ந்தவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் முறைகேடு குறித்து தனி நீதிமன்றம் அமைத்து அனைத்தையும் விசாரிப்போம்… இது தான் சட்டசபை தேர்தல் பிரச்சார நேரத்தில் போகும் இடம் எல்லாம் ஸ்டாலின் சொன்ன வார்த்தை.
பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியில் அமர்ந்துவிட்டது. பெரும் சவாலாக இருந்த கொரோனாவையும் இப்போது கட்டுக்குள் கொண்டு வந்தாகிவிட்டது. மக்கள் நல திட்டங்களும் ஒரு பக்கம் வேகம் எடுத்துக் கொண்டு இருக்க… அடுதத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் முறைகேடுகள் பற்றியும் திமுக அரசு தோண்டி, துருவ ஆரம்பித்துள்ளது.
சைலண்ட்டாக அதற்கான வேலைகள் கடந்த ஒரு மாதமாக பார்க்கப்பட்டு வருவதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். திமுக வைத்துள்ள குறியில் முன்னணியில் இருப்பவர் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி. அதிமுக ஆட்சியில் சர்வ வல்லமை பொருந்திய அமைச்சராக வலம் வந்தவர். அப்போது இவர் உள்பட பல்வேறு அமைச்சர்கள் மீது ஆளுநர் வரை ஆதாரங்களுடன் ஊழல் புகாரை அளித்துவிட்டு திமுக வந்தது.
கடந்த ஆட்சியின் போதே வேலுமணிக்கு எதிராக, திமுகவின் சட்டப்பிரிவை சேர்ந்த ஆர்எஸ் பாரதி, அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தனர்.
மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளில் முறைகேடு, வேலுமணிக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தப்புள்ளி அனுமதி என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கோர்ட்டின் நேரடி மேற்பார்வையில், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த புகாரில் வேலுமணிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று அப்போது இருந்த அதிமுக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பை பதிவை மனுதாரர்கள், நிறைய ஆதாரங்கள், ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டி உள்ளதாகவும், நேரடி விசாரணை அவசியம் என்றும் கூறி உள்ளனர்.
மேலும் ஆட்சி மாறிவிட்டது, சூழலும் மாறி இருக்கிறது என்பதால் வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுள்ள்னர். அனைத்தையும் கவனமாக பரிசீலித்த நீதிமன்றம், வேலுமணி மீதான விசாரணை அறிக்கையை அரசு தரப்பு ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறப்பட்டாலும், நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அதிரடியாக தெரிவித்து இருக்கிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கணக்கு தணிக்கை துறையின் அறிக்கை பற்றி விசாரணை நடத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும். 8 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்று இப்போதுள்ள திமுக அரசு தரப்பில் கேட்கப்பட்டது. வேலுமணி தரப்பும் அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து முழு விசாரணை நடத்த வேண்டும், முறைகேடு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை அவசியம் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2வது வாரத்துக்கு ஐகோர்ட் தள்ளி வைத்திருக்கிறது.
வழக்கு விசாரணையின் எஸ்பி வேலுமணி மீதான அறிக்கை பற்றி அப்போது இருந்த அதிமுக அரசு அளித்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு உள்ளதை அரசியல் நோக்கர்கள் உற்று பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
இது நிச்சயமாக எஸ்பி வேலுமணிக்கு வைக்கப்பட்ட செக் என்றும், விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் வேகம் எடுக்கும் என்றும் அறிவாலயத்தில் இருந்தும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இனி.. அடுத்தடுத்து இதுபோன்ற அதிரடிகள் அரங்கேறும் என்றும் திமுக முக்கிய பிரமுகர்களிடம் இருந்து தகவல் லீக் செய்யப்பட்டு உள்ளது.