திமுகவை திடீரென திட்டிய கமல்..! பின்னணியில் ‘அந்த’ விஷயம்
சென்னை: தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி பெண்களுக்கு 1000 ரூபாய் தராமல் இருப்பது ஏற்படையதல்ல என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் என்ஆர்,பாஜக கூட்டணி அரசுமுதல்வர் ரங்கசாமி சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் இருந்தன.
நிறைய அறிவிப்புகள் இருந்தாலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும், மாணவர்களுக்கு லேட்டாப் ஆகியவை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தது பெரும் வரவேற்பை பெற்றது. புதுச்சேரி மாநிலத்தின் இந்த அறிவிப்பை கண்ட பலரும் தமிழகத்தில் இதேபோன்ற அறிவிப்பு எப்போது என்று கேள்வி கேட்டு ஸ்டாலின் அரசை குடாய்ந்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தை முன்வைத்து மக்கள் நீதி மய்யம் கடுமையான குற்றச்சாட்டை கூறி இருக்கிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஊதியம் என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென நாட்டிலேயே முதன்முதலில் குரல் கொடுத்தவர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன். இந்த திட்டத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து, அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்பதுடன், புதுச்சேரி அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.
அதேசமயம், இந்த திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அளித்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திமுக, இன்னமும் பிடிகொடுக்காமல் உள்ளது ஏற்புடையதல்ல.
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.