காங்.சை ‘ஜெயிக்க’ வைத்த அண்ணாமலை…! பொளக்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: தெலுங்கானாவில் அண்ணாமலையின் பிரச்சாரத்தால் கிடைத்த தேர்தல் ரிசல்ட்டை நெட்டிசன்கள் பொளந்து கட்டி வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…! முன்னாள் போலீஸ் அதிகாரி, இந்நாள் அரசியல்வாதி… இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம். போகிற இடங்களில் அதிரடியாக அரசியல் செய்து இளசுகளின் அன்பை பெற்றவர்.
தமிழகத்தில் எப்படியாவது பாஜகவை மலர வைத்துவிடுவது என்ற நோக்கத்தில் பரபரப்பாக இயங்கி கொண்டிருப்பவர். சொந்த மண்ணில் மட்டுமல்லாது, அண்டை மாநிலமான தெலுங்கானாவில் பாஜக வளர்க்க அரும்பாடு பட்டவர்.
அதன் அடையாளமாக அம்மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவை ஆதரித்து அங்கு சென்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். செகந்திரபாத் கன்டோன்மென்ட் தேர்தலில் தமிழில் பேசி… கலக்கி, வாக்கு சேகரித்தார். சில பகுதிகளில் 3 மொழிகளில் பேசி ஆதரவு திரட்டினார். செல்லும் இடங்களில் மத்திய பாஜக அரசின் சாதனைகள், பிரதமர் மோடியின் திட்டங்கள் என்று அனல்பறக்க பேசி மக்களிடம் பிரச்சாரம் செய்தார்.
தேர்தல் பிரச்சாரம் முடிந்து… வாக்குப்பதிவும் நடந்தது… இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி முடிவுகளும் வெளிவரத் தொடங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கானாவில் பாஜக தோற்று போய் இருக்கிறது.
ஆளுங்கட்சியாக இருந்த சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பி, காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜகவோ ஒற்றைப்பட எண்ணிக்கையில் தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது.
தேர்தல் முடிவுகள் வரும் போது, எப்போதும் குஷியாக இருக்கும் பாஜக தொண்டர்கள் தெலுங்கானா ரிசல்ட்டால் காற்று இறங்கிய பலூனாகி இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் தெலுங்கானா ரிசல்ட்டை வைத்து நெட்டிசன்ஸ், பாஜகவுக்கு எதிராக புகுந்து விளையாட ஆரம்பித்துள்ளனர். கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய அண்ணாமலை சென்றார்… ஆளுங்கட்சியாக இருந்த பாஜக ஆட்சியை காங்கிரசிடம் இழந்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.
இப்போது, தெலுங்கானாவில் பிரச்சாரம்… அதன் ரிசல்ட்டும் தெரிந்துவிட, எங்கெல்லாம் அண்ணாமலை செல்கிறாரோ அங்கெல்லாம், காங்கிரஸ் ஜெயிக்கிறது.. அண்மையில் அதற்கு உதாரணம், தெலுங்கானா என்று பதிவுகளை போட்டு தாக்கி வருகின்றனர்.
அப்படியே இங்கிட்டும் வந்துட்டு போங்க… 2024 தேர்தல் சீக்கிரம் வர போகுது என்றும் நெட்டிசன்ஸ் கிண்டலடித்தும் வருகின்றனர். எதற்கும் சோர்ந்து போகாத அண்ணாமலை ஆதரவாளர்கள், ரசிகர்கள் பதிவுகளுக்கு பதிலடி போட்டு படம் காட்டி வருகின்றனர் என்பது தனிக்கதை.