ரஜினிகாந்த் மகளை பிரியும் தனுஷ்.. 18 ஆண்டு கால திருமண பந்தம் முடிந்ததாக பரபர கடிதம்
சென்னை: மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக நடிகர் தனுஷ் பரபரப்பாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமது 18 ஆண்டு கால திருமண பந்தம் இதன் மூலம் முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு தமிழ் திரையுலகமே திரும்பி பார்க்கும் வகையில் நடிகர் தனுஷ், ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவருக்கும் கல்யாணம் நடந்தது. இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.
இந் நிலையில் தங்களின் 18 ஆண்டு கால திருமண பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே கடிதம் மூலம் பரஸ்பரம் அறிவித்துள்ளனர்.
இது குறித்து தனுஷ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது: 18 ஆண்டுகள் தம்பதியாக, பெற்றோராக பயணம் செய்தோம். ஆனால் இப்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்து போக முடிவு செய்து இருக்கிறோம்.
நாங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவை அனைவரும் மதித்து ஏற்குமாறு கேட்டு கொள்கிறேன், ஓம்நமச்சிவாய… என்று கூறி உள்ளார்.
இதே போன்று ஐஸ்வர்யாவும் ஒரு கடிதத்தை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: 18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக பெற்றோராக ஒருவருக்கொருவர் இருந்துவிட்டோம்.
இப்போது எங்கள் பாதைகளில் தனித்தனியே பயணிக்க முடிவு செய்திருக்கிறோம். தனியாக இருந்து ஒருவரையொருவர் புரிந்து கொள்வது என்று முடிவு எடுத்துள்ளோம். எங்கள் முடிவை ஏற்று, தனித்தன்மைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்கிறோம் என்று கூறி உள்ளார்.
நேற்றிரவு அடுத்தடுத்து வெளியான இந்த அறிவிப்புகளினால் தமிழ் திரையுலகம் மட்டுமல்ல… இந்திய திரையுலகமே அதிர்ச்சி அடைந்து இருக்கிறது.