எஸ்பி வேலுமணிக்கு எதிராக இறுகும் பிடி…! லஞ்ச ஒழிப்புத்துறை பக்கா’ ஆக்ஷன்
சென்னை: முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு அடுத்த சிக்கலாக அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.
மொத்தம் 60 இடங்கள், 12 மணி நேரம்… அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு, அவரது அலுவலகங்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகள், அலுவலகங்கள் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக ரெய்டு நடத்தப்பட்டது.
ஒரு கட்டத்தில் ரெய்டு முடியும் தருவாயில் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளும் லஞ்ச ஒழிப்புத்துறையால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அந்த நடவடிக்கை தவிர்க்கப்பட்டது.
ரெய்டின் போது 13 லட்சம் ரொக்கம், 2 கோடி மதிப்புள்ள ஆவணங்கள், கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர்.
வேலுமணி வியாபார பங்குதாரர்களுக்கு சொந்தமான அலுவலகங்களில் ரெய்டு இன்னமும் முற்று பெறவில்லை. மேலும் இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை நோக்கி அதிகாரிகள் நகர ஆரம்பித்துள்ளனர்.
அதன் முக்கிய கட்டமாக, வேலுமணியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. அவரது வங்கி லாக்கர்களும் முடக்கப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்துள்ள சொத்து ஆவணங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் வேகமாக நடக்க ஆரம்பித்து இருக்கின்றன.
சொத்து மதிப்பீடுகள், சொத்துக்கான வருமானம் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் விசாரிக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் களம் புகுந்துள்ளனர். நாட்கள் நகர, நகர வேலுமணியின் மீதான நடவடிக்கைகள் வேகம் எடுக்கும் என்றும், விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் ஜரூராக நடக்கும் என்கின்றனர் அதிகாரிகள்…!