தற்கொலைக்கு முயன்ற பாமக எம்எல்ஏ…! பரபரத்த தைலாபுரம்…!
சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு இல்லாத ஆக்சிஜன் தமக்கு தேவையா என்று கூறி பாமக எம்எல்ஏ தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அக்கட்சியின் தலைமையை அதிர வைத்துள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக 5 இடங்களில் வென்றது. அவர்களில் ஒருவர் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா. அருள். அக்கட்சியின் அனைத்து போராட்டங்களிலும் ஆரம்ப காலம் தொட்டே அதிரடியாகவும், அதி தீவிரமாகவும் களம் காணும் நபர்.
அவர் இப்போது மேற்கொண்டுள்ள தற்கொலை முயற்சி அக்கட்சியின் தலைமையை செமத்தியாக அதிர வைத்துள்ளது. கடந்த 17ம் தேதி இரவு அவர் தமது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவோடு ஒரு போட்டோவையும் இணைத்திருந்தார்.
பாலிதீன் பை ஒன்றால் தன் தலையை இறுக கட்டியபடி(ஆசை படத்தில் சுவலட்சுமியின் அக்கா ரோகிணியை கணவர் பிரகாஷ்ராஜ் கொல்லும் method) போட்டோவையும் போட்டு கீழ்க்கண்டவாறு பதிவிட்டு உள்ளார்.
“சேலத்தில் என் மக்களுக்கு இல்லாத ஆக்ஸிஜன் எனக்கு தேவையா என்று யோசித்து வருகிறேன். காலை எனது தலையை பிளாஸ்டிக் பையை கயிற்றால் கட்டிக் கொண்டு இந்தப் படத்தில் உள்ளது போல சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வாசலில் உங்கள் எம்.எல்.ஏ. காலை 9.30 மணிக்கு தர்ணா செய்ய திட்டமிட்டுள்ளேன்.
உங்களது வேலைக்காரனாக இதை செய்யவா? கருத்தை சொல்லவும். எனக்கு எம்.எல்.ஏ. பதவி கொடுத்த உங்களுக்கு இப்போது கொடுக்க எனது உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. கண்ணீருடன் இரா. அருள் எம்.எல்.ஏ.
திருத்தம்: நமது ஆலோசகர்களின் ஆலோசனையை ஏற்று அய்யா சின்னய்யா அனுமதியோடு இன்னும் இரு நாள் வாய்ப்பு தந்து தர்ணா” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார் இரா. அருள் எம்.எல்.ஏ. என்று பதிவிட்டு உள்ளார்.
இரா. அருளின் இந்த பதிவு அவரது ஆதரவாளர்களிடையே மட்டுமின்றி தைலாபுரம் தலைமையையே அதிர வைத்தது. மறுநாளான 18ம் தேதி மீண்டும் இரா. அருளின் முகநூல் பக்கத்தில் கீழ்கண்டவாறு பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் அவர் கூறி இருந்ததாவது:
“இரவு முழுதும் பல தொலைபேசி அழைப்புகள், கமெண்டில் உங்களது நூற்றுக்கணக்காண ஆலோசனைகளை ஏற்று எனது முந்தைய பதிவை நீக்குகிறேன். உங்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளோடு விழிப்புணர்வு பரப்புரையை மட்டும் உங்களது ஆலோசனைப்படி முன்னெடுத்துச்செல்வோம். நன்றி -இரா.அருள் MLA” என்று பதிவிட்டு இருந்தார்.
பாமக தலைமையிடம் இருந்து வந்த உத்தரவை தொடர்ந்து தமது தற்கொலை முயற்சியை கைவிட்ட எம்எல்ஏ இரா. அருள், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டமானது சேலம் இரும்பாலையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மருத்துவமனை பணியினை விரைவுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டமாகும்.
திமுகவுடன் இணக்கமான போக்கை பாமக கடைபிடித்து வரும் தருணத்தில் தேவையில்லாமல் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று பாமக தலைமை எம்எல்ஏ இரா. அருளை கண்டித்ததாகவும் அதன் பின்னரே நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.