எதிர்க்கட்சி ஆட்சியை தடுக்க காங். பக்கா பிளான்…! புதுச்சேரியில் பரபர அரசியல் திருப்பம்…!
புதுச்சேரி: புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து, அங்குள்ள அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதோ, அதோ என்று கடந்த 2 வாரங்களாக பரபர திருப்பங்களுடன் சென்று கொண்டிருந்த நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு இன்று கவிழ்ந்தே விட்டது. சட்டசபையில் பெரும்பான்மை இழந்துவிட்டதாக சபாநாயகர் அறிவிக்க, அதிருப்தியுடன் அவையில் இருந்து வெளியேறிய முதலமைச்சர் நாராயணசாமி, ஆளுநரை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டார்.
தமது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டதாகவும், இனி அடுத்த என்ன நடவடிக்கை என்பதை ஆளுநர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நாராயணசாமி கூறி உள்ளார். ஆட்சி கவிழ்ப்பு வேலையை செய்த பாஜக, அதிமுக மற்றும் என்ஆர் காங்கிரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
ஆட்சி கோவிந்தா ஆன நிலையில் இனி புதுச்சேரியில் அடுத்து என்ன நடக்கும் என்ற அரசியல் பரபரப்பு எழுந்துள்ளது. தேர்தலுக்கு மிக குறுகிய காலமே இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு வேளை அப்படி ஒரு நடவடிக்கையை பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் எடுக்க முயற்சித்தால் அதற்கு தடை போடும் நடவடிக்கைகளில் இறங்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. ஒட்டுமொத்தமாக உள்ள மற்ற காங். எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்யும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒட்டு மொத்த ராஜினாமாவால் எதிர்க்கட்சியினரால் ஆட்சி அமைக்க முடியாது என்று புதுச்சேரி அரசு கொறடாவும் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிப்பு நெருங்க, நெருங்க புதுச்சேரி அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது என்றே கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.