ஸ்டாலினின் 10 ஆண்டு பக்கா ‘பிளான்’…! ‘ஜெர்க்’கில் அதிமுக
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் 10 ஆண்டுகள் திட்டம் என்ற ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட அதிமுக ஒட்டுமொத்தமாக ஜெர்க்கில் இருப்பதாக கூறப்படுகிறது.
10 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்திருக்கிறது. இந்த வெற்றி அவ்வளவு எளிதில் கிடைத்தது இல்லை என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் நன்கு உணர்ந்துள்ளார் என்றே சொல்லலாம். அதனால் தான் ஆட்சியிலும், அதிகாரத்திலும் ஒவ்வொரு அடியையும் சர்வ ஜாக்கிரதையாக எடுத்து வருகிறார்.
ஒரு அறிக்கையாகட்டும், பேட்டி ஆகட்டும், மக்கள் நல திட்டங்கள் ஆகட்டும்.. சர்வ ஜாக்கிரதையான அவரது செயல்பாடுகள் கண்டு மூத்த நிர்வாகிகளே ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதெல்லாம் என்ன… இதைவிட சூப்பர் பிளான் ஒன்றுடன் தலைவர் களத்தில் இறங்கி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உடன்பிறப்புகளை மகிழ்ச்சியின் உச்சிக்கு கொண்டு போயிருக்கிறது.
இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சி இந்த 5 ஆண்டுகள் மட்டுமல்ல… அடுத்த 5 ஆண்டுகளுக்கும் தொடர வேண்டும் என்பது தான் அந்த திட்டம் என்ற பேச்சுகள் வெளியாகி உள்ளன. அதற்கான திட்டங்களுடன் ஸ்டாலின் உள்ளார் என்கிறார் விவரம் அறிந்தவர்கள்.
அடுத்த சட்டசபை தேர்தலிலும் வென்று ஆட்சியை தொடர வேண்டும் என்று அவர் முடிவெடுத்து உள்ளாராம். அதிமுகவில் நாளுக்கு நாள் அதிகார போட்டி, உட்கட்சி பூசல் வலுத்து வருகிறது என்பதை நன்றாகவே பார்க்க முடிகிறது. இந்த பூசலும், அதிகார போட்டியும் சசிகலா நேரடியாக களத்தில் இறங்கும் போது இன்னமும் அதிகமாகும் என்று அவர் எதிர்பார்க்கிறாராம்.
ஆகையால், எதிர்க்கட்சிகளின் பலவீனத்தை சாதகமான முறையில் மாற்றி… அதாவது அதிருப்தியுடன் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை கட்சியில் சேர்ப்பது, என்ற அம்சமும் இந்த 10 ஆண்டுகால பிளான் என்ற திட்டத்தில் உள்ளதாம்.
அதற்காக தான் முதல்கட்டமாக செந்தில் பாலாஜியிடம் சில முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளதாம். அதிமுகவின் கோட்டை கொங்கு மண்டலம் என்ற கணக்கீட்டை முதலில் பிரேக் செய்வது, பின்னர் படிப்படியாக அதிமுக, அமமுகவில் உள்ளவர்களை கட்சியில் இணைய வைப்பது உள்ளிட்ட விவகாரங்களும் அடங்குமாம்.
மொத்தம் 6 மாவட்டங்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூக வாக்குகளை திருப்புவது, அதன் மூலம் அந்த பகுதிகளில் திமுகவை முன்பை விட வலுவாக்குவதும் திட்டத்தில் ஒரு முக்கிய அம்சம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
அதிமுக, அமமுகவில் இருந்து உடனடியாக திமுக பக்கம் தாவும் காட்சிகள் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று அவர்கள் காதை கடிக்கின்றனர். அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளின் செயல்பாடுகள், ஆளும் அரசின் மக்கள் நலத்திட்டங்கள், இவற்றோடு மக்களிடம் எளிதான அணுகுமுறை என அடுத்தடுத்த திமுக பலமாக ஸ்கோர் செய்யும் காட்சிகள் அடுத்த வரக்கூடிய நாட்களில் விரைவில் அரங்கேறும் என்கின்றனர்.