10 ஆயிரம் பள்ளிகளுக்கு இப்படி ஒரு நிலைமையா…? அதுவும் தமிழ்நாட்டிலா…?
சென்னை: தமிழகத்தில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பள்ளிகள் மூடப்படுவதாக ஷாக் அறிவிப்பு கல்வித்துறையை மிரள வைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம், நெருக்கடி, சரிவு என்பது இப்போது 2வது ஆண்டு. முதல் அலை… இப்போது 2வது அலை என கல்வி நிலையங்கள் பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. ஓராண்டுக்கு மேலாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பிரைமரி, நர்சரி பள்ளிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன.
நீதிமன்ற உத்தரவுப்படி 75 சதவீதம் பள்ளிக்கட்டணம் வசூலித்து கொள்ளலாம் என்றால் கூட அந்த கட்டணத்தையும் பெரும்பாலோனார் கட்ட முடியாத நிலைதான் இப்போது காணப்படுகிறது. கட்டண இழப்பால் ஆயிரக்கணக்கான பிரைமரி, நர்சரி பள்ளிகள் பெரும் தவிப்பில் உள்ளன.
இது குறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் நந்தகுமார் கூறி இருப்பதாவது: மாநிலம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 10000 நர்சரி, பிரைமரி பள்ளிகள் நடத்த வழியின்றி உள்ளன.
பெரும்பாலான பள்ளிகள் வாடகை கட்டிடத்தில் இருக்கின்றன. மின்கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட பல கட்டணஙகள் நிலுவையில் உள்ளன. இவை தவிர 50000 பள்ளி வாகனங்களுக்கு இருக்கை வரி, காப்பீடு கட்டணம், சாலை வரி உள்ளிட்டவை கட்ட வேண்டி இருக்கிறது.
பெற்றோர்களிடம் இருந்து கல்விக் கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளதால் பல பள்ளிகள் இனி இயங்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. பள்ளிகளுக்காக வாங்கிய கடனை கட்ட முடியாததால் 10000 நர்சரி, பிரைமரி பள்ளிகளை மூடுவது என்று முடிவெடுத்துள்ளோம்.
எங்கள் பள்ளிகள், அதில் உள்ள 50 லட்சம் மாணவர்களை அரசே எடுத்துக் கொள்ளட்டும். வேறு வழி தெரியாத நிலையில் இருக்கிறோம் என்று கூறி உள்ளார்.