அரிசி மூட்டை தூக்கிய அண்ணாமலை…! என்ன நடக்குது இங்க…?
சென்னை: அதிரடிக்கு பெயர் போன அண்ணாமலையின் வீடியோ ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
தமிழக பாஜகவில் தமக்கான இடத்தை வேறு வடிவத்தில் நிலை நிறுத்திக் கொண்டவர் அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ், சுறுசுறுப்பு, வேகம், இளைஞர்களின் நாயகன் என்று அவரை ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் ஜாமாகி கிடக்க, அவர்களுக்கு பாஜக உதவி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்களை அனுப்பும் வேலைகளில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பிசியாக இருந்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட நேரத்தில் அண்ணாமலையின் வீடியோ ஒன்று பார்ப்போரை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. அவர் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர், தனித்த அடையாளம் கொண்டவர்.. ஆனால் அதை எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு தொண்டராக, எளியவராக நடந்து கொண்டார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
விஷயம் இது தான்…! சென்னையில் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை பாஜக அனுப்பி வருகிறது. அதற்கு கொண்டு வரப்பட்ட பொருட்களை பிரித்து அனுப்பும் வேலையில் தொண்டர்கள் மும்முரமாக இருந்துள்ளனர்.
அப்போது தாம் தலைவர் என் எல்லைக்கோட்டை மறந்து அல்லது கடந்து சாதாரண காரியகர்த்தா என்பதை உணர்த்தும் பொருட்டு பாஜக தலைவர் அண்ணாமலை அரிசி மூட்டையை அலேக்காக தூக்கி முதுகில் சுமந்து பின்னர் நடந்து கொண்டு வாகனத்தில் வைக்கிறார்.
அவரின் இந்த திடீர் அதிரடியை கண்டு தொண்டர்கள் குழம்பி போய் நிற்க… அவர்களில் ஒருவர் இந்த சூப்பர் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்… இப்போது இணையம் முழுக்க பாஜக ஆதரவாளர்கள், தொண்டர்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இவர்தான் இன்றைய பாஜகவுக்கு தேவை, எளிமை, இயல்பான நடவடிக்கை, பணிவு என உள்ளே புகுந்து கமெண்ட்டுகளை ஆதரவாளர்கள் அள்ளித் தெளித்து வருகின்றனர்.
ஆனால் இந்த வீடியோவை பார்க்கும் பலர்.. எளிமையாக இருப்பது சிறப்பு. அதற்காக இப்படியும் இருக்க வேண்டுமா என்ன? தலைவர் தலைவராகவே இருக்கணும் அல்லவா? அதுதானே கெத்து என்றும் கூறி வருகின்றனர்.
வேறு சிலர்… இது ஷூட்டிங்.. முன்னரே சொல்லி வைத்து எடுப்பது என்று பங்கமாய் கலாய்த்து மீம்ஸ் ஆக கிரியேட் செய்து தள்ளுகின்றனர். எது எப்படியோ… இந்த வீடியோ வைரலாகி உள்ளது என்பதுதான் யதார்த்தம்…! வைரல் வீடியோ இந்த செய்தியின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளது.