ரசிகர்களை சந்திக்கும் முன்பு ரஜினியின் ‘மாஸ்’ பிளான்…? எகிறும் எதிர்பார்ப்பு
சென்னை: ரசிகர்களை சந்திக்கும் முன்பாக, தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்ணாத்த பட பிஸி ஷெட்யூல்லில் இருந்த ரஜினிகாந்த், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அனைத்து மருத்துவ சிகிச்சைகள் முடிந்து தற்போது சென்னை வந்துவிட்டார்.
அண்ணாத்த படம் பற்றி ஒரு பக்கம் பேச்சுகள் ஏக எதிர்பார்ப்புடன் வந்து கொண்டு இருக்கின்றன. ரசிகர்கள் படம் எப்போது என்ற ஏக்கத்தில் உள்ளனர். அண்ணாத்த படம் மாஸாக வந்திருப்பதாக கோலிவுட் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், அண்ணாத்த படம் பற்றியும் புதுப்புது தகவல்கள் வெளியாகி கொண்டே இருப்பதால் ரசிகர்கள் அண்ணாத்த ட்ரீட்டுக்கு காத்திருக்கின்றனர். ஆனால் படத்துக்கு முன்பாக ரஜினிகாந்த் ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அதாவது வரும் 13ம் தேதி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரக்க வைத்துள்ளன. இது பற்றிய விவரங்கள் அனைத்து மாவட்ட நிர்வாகிளுக்கும் அனுப்பப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள ராகவேந்திர திருமண மண்டபத்தில் சந்திப்பு நடக்க உள்ளதாக தெரிகிறது. சந்திப்பில் நடப்பு நாட்டு நிலைமைகள், மாவட்ட நிர்வாகிகள் குடும்ப சூழல் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி பேசப்படலாம் என்று தெரிகிறது.
ஆனால் அதை விட முக்கிய விஷயம் இன்று தற்போது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது. அதாவது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கும் முன்பாக தமிழருவி மணியனை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது ரஜினி மக்கள் மன்றத்தை அவர் ஒப்படைக்க உள்ளார் என்று ஒரு தகவல் பரபரத்து ஓடி கொண்டிருக்கிறது. இல்லை… அரசியல் நகர்வா? அல்லது வழக்கமான சாதாரண, நலன் விசாரிப்புக்கான சந்திப்பா என்று தெரியவில்லை.
ஆனால் ரசிகர்கள் தரப்பிலோ வேறு ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் தலைவர் உடல்நிலை பற்றி ரசிகர்கள் பலர் ஆழ்ந்த கவலைப்பட்டனர் என்றும், இப்போது ரஜினி மருத்துவ பரிசோதனை முடிந்து ஊர் திரும்பியதால் சந்திக்க விரும்பியதாகவும், அதற்கு ரஜினி ஒப்புக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. எது… எப்படி இருந்தாலும் நடக்கும் போது அனைத்தும் தெரியத்தானே போகிறது என்று குரூப் இணையத்தில் விமர்சனங்களை அள்ளி தெளித்து வருகிறது.