செப். 7 முதல் தமிழகத்தில் எந்த ரயில்கள் ஓடும்? இதோ விவரம்…!!
சென்னை: தமிழகத்தில் மொத்தம் 7 ரயில்கள் தான் வரும் 7ம் தேதி முதல் இயங்கும் என்று தெரிகிறது.
ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25 முதல் பயணிகள் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பிறகு ஜூனில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.
இது தவிர டெல்லி-சென்னை இடையே ராஜ்தானி சிறப்பு ரயிலும் ஓடியது. பின்னர் ஊரடங்கு கடுமையாக்கப்பட, சிறப்பு ரயில் சேவைகள் மீண்டும் நிறுத்தப்பட்டன.
இந் நிலையில் வரும் 7ம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் ரயில் சேவைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்படுகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில் ரயில் சேவையை தொடங்குவது குறித்து தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில், தமிழகத்தில் மொத்தம் 7 ரயில்களை மட்டும் இப்போதைக்கு இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
கோவை-காட்பாடி, மதுரை- விழுப்புரம், திருச்சி-செங்கல்பட்டு ஆகிய சிறப்பு ரயில் சேவை சென்னை வரை நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கவும், மின்சார ரயில்களை இயக்கவும் மத்திய அரசு அனுமதி தர வில்லை. ஆகவே தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தால் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.