உதயநிதிக்கு வர போகும் முக்கிய பதவி…! ஸ்டாலினின் கொங்கு மண்டல ஸ்கெட்ச்…!
சென்னை: கொங்கு மண்டலத்தில் திமுகவை தூக்கி நிறுத்த உதயநிதிக்கு புதிய பொறுப்பை அளிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் எதிர்பார்த்தது போன்று திமுக அரியணையில் அமர்ந்து 2 மாதங்களாக போகிறது. தொடக்கத்தில் கொரோனா தொற்று ஒழிப்பே தலையாய பணி என்று களமிறங்கிய திமுக அரசு அதில் வெற்றியும் கண்டுவிட்டது.
அடுத்த கட்டமாக இப்போது தேர்தலில் திமுக தோற்ற இடங்கள், ஏன் தோல்வி, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற பணிகளில் இறங்கி இருக்கிறது. சட்டசபை தேர்தலில் ஒட்டுமொத்த தமிழகமே திமுகவுக்கு ஆதரவு அளித்தாலும் கொங்கு மண்டலத்தில் மட்டும் ஜெயம் கிடைக்கவில்லை.
அதற்கு இப்போது என்ன என்கிறீர்களா…? இனி கொங்கு மண்டலத்தை கோட்டையாக மாற்றும் நடவடிக்கைகளில் திமுக இறங்கி இருக்கிறது. தேர்தலின் போது ஏன் கொங்கு பெல்ட்டில் திமுக தோற்றது? குறிப்பாக பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தேசிய அளவில் பரபரப்பாகியும் அதிமுக தான் வெற்றி கொடியை நாட்டியது.
கொங்கு மண்டலத்தில் திமுகவின் தோல்வி ஸ்டாலினை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருந்தது. முதலில் கொரோனா தடுப்பு பணி அடுத்து திமுகவின் தோல்விக்கு காரணமானவர்களை களையெடுக்கும் பணி என்று திட்டமிட்டார்.
இப்போது கொங்கு மண்டலத்தை நோக்கி அவர் கவனத்தை திசை திருப்பி இருக்கிறார். கட்சியில் உள்ளடி வேலை செய்து தோற்கடிக்க காரணமாக இருந்த நிர்வாகிகள் கட்டம் கட்டப்பட்டு வருகின்றனர். அதன் முதல் விக்கெட் தான் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜை பொறுப்பில் இருந்து விடுவித்திருக்கிறார்.
இன்னும் பல முக்கிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியுடன் டச்சில் உள்ளனராம். அந்த பட்டியலும் ஸ்டாலினுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டதாம்.
இனி ஆக்ஷன் மட்டுமல்ல… ஆபரேஷனும் தான் என்று அறிவாலயத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அதோடு ஒரு போனஸ் தகவலும் அங்கிருந்து கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாம்.
கொங்கு மண்டலத்தை தமது பொறுப்பில் இருந்து எடுத்து களப்பணியாற்ற உதயநிதி விரும்புகிறாராம். இது குறித்து தமது விருப்பத்தை ஸ்டாலினிடம் கூற… க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாம். உதயநிதியை மேற்கு மண்டல அமைப்பு செயலராக நியமிக்கலாம் என்று ஆலோசனைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, உதயநிதி கொங்கு மண்டலத்தை வெற்றி மண்டலமாக மாற்ற திமுக திட்டமிட்டு உள்ளதாக அறிவாலயத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. ஆக மொத்தத்தில் கொங்கு மண்டலத்தில் இருந்தே திமுக தமது ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளது என்பது தான் லேட்டஸ்ட் தகவல்…!