அது வேற வாய்..! சீமானை சில்லு சில்லாக்கி விமர்சனம்
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஓராண்டுக்கு முன்பே சென்னையில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்த சீமான், இப்போது அதை மாற்றி இருப்பது விவகாரம் ஆகி இருக்கிறது.
நரம்புகள் புடைக்க, கண்கள் சிவக்க, உடல் இங்கும் அங்கும் ஆட, உரத்த குரலில் பேசுவது சீமானின் ஸ்டைல். தனியார் தொலைக்காட்சிகளில் நேரடி விவாதங்களின் போது கேட்கும் கேள்விகள் நெருக்கடியாக இருந்துவிட்டால் பதிலை மடை மாற்றுவது சீமான் இயல்பு.
இதை இப்போது கட்சி மேடைகளிலும் பயன்படுத்தி வருகிறார். அதற்கு லேட்டஸ்ட்டாக தமது கட்சியின் 40 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் விழாவில் அப்பட்டமாக தெரிந்திருக்கிறது.
சென்னையில் லோக்சபா 2024ம் ஆண்டு தேர்தலுக்கான வேட்பாளர்களை சீமான் மேடையேற்றி அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். அப்போது மத்திய சென்னை வேட்பாளராக மருத்துவர் கார்த்திகேயன் என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இங்கே தான் ஒரு விஷயத்தை விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். கடந்தாண்டு மார்ச் மாதமே சென்னையில் 3 தொகுதிகளில் 3 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்று மேடையில் முழங்கினார். மத்திய சென்னையில் பாத்திமா பர்கானா, தென் சென்னையில் நாச்சியாள் சுகந்தி, வட சென்னையில் இளவஞ்சி ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று முழங்கி தள்ளினார்.
இவர்களில் நாச்சியாள் சுகந்தி அண்மையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தம்மை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இவரை தவிர்த்து மற்ற 2 பேரும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர்களுக்கு பதிலாக, டாக்டர் அமுதினி, தமிழ்ச்செல்வி ஆகியோர் முறையே வட சென்னை, தென் சென்னை வேட்பாளர்களாக சீமான் அறிவித்துள்ளார்.
மத்திய சென்னையில் பாத்திமா பர்கானாவுக்கு பதில் மருத்துவர் கார்த்திகேயன் என்பவர் போட்டியிடுவதாகவும் சீமான் அறிமுகப்படுத்தினார். அப்போ ஒரு வருடம் முன்பு மேடையில் வேட்பாளர்களின் பெயர்களை உரக்க சொல்லியது உதாரா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
வேட்பாளர்கள் அறிவிப்பை கண்ட நாம் தமிழர் தம்பிகளே என்ன நடக்கிறது என்பது புரியாமல் உள்ளதாக தெரிகிறது. கடந்தாண்டு மார்ச் மாதம் மேடையில் பேசியது எல்லாம் பொய்யா கோபால் என்ற பாணியில் பலரும் இப்போது இணையத்தை கேலி, கிண்டல் வசனங்களால் தெறிக்க விடுகின்றனர்.
சீமான் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியல் வீடியோவையும் பலர் வெளியிட்டு அதிரடி காட்டி வருகின்றனர். அந்த வீடியோ செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.