2017ல் அனிதா, 2022ல் நிஷாந்தினி… தொடரும் நீட் தற்கொலைகள்
அரியலூர்: நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து அரியலூர் மாணவி நிஷாந்தினி என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்னும் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த தேர்வை எழுதி தோற்று அல்லது எதிர்கொள்ள பயந்து இன்னமும் பல மாணவர்கள் அவர்களில் பலர் தற்கொலை என்னும் முடிவை எடுத்துக் கொள்கின்றனர்.
அப்படித்தான் தமிழகத்தில் 2017ம் ஆண்டு நீட் தேர்வால் அரியலூரில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாத நிலையில் அதே அரியலூர் மாவட்டத்தில் இருந்து மேலும் ஒரு மாணவி நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்.
அவரது பெயர் நிஷாந்தினி. அரியலூரில் ரயில்வே காலனி தெருவை சேர்ந்த நடராஜன், உமாராணியின் மகள். 2020 – 21ம் ஆண்டில் 12ம் வகுப்பில் 430 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவர் என்பது தமது கனவு என்று கூறி வந்த அவர், நீட் தேர்வை எதிர்கொள்ள திருச்சியில் உள்ள பயிற்சி மையத்துக்கு சென்று வந்திருக்கிறார்.
நாளை நீட் தேர்வு.. ஆனால் இன்று காலை நிஷாந்தினி தமது வீட்டில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறக்கும் முன் தந்தைக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், நீட் தேர்வில் தம்மால் தேர்ச்சி பெற முடியாது என்பதால் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.