திருக்குறள் போல பணியாற்றுவேன்… கரூரின் புதிய கலெக்டர் பிரபு சங்கர்…!
கரூர்: திருக்குறள் போல எல்லாருக்கும் எல்லாம் என்பது போல பணியாற்றுவேன் என்று கரூர் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பிரபு சங்கர் கூறி உள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சென்னை, திருவள்ளூர், கரூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை தமிழக அரசு அறிவித்தது. கரூர் மாவட்டத்துக்கு புதிய கலெக்டராக பிரபு சங்கர் அறிவிக்கப்பட்டார். அவர் இன்று கரூர் மாவட்டத்தின் 18 வது புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கொண்டார்.
முன்னதாக சென்னை குடிநீர் வாரியத்தின் செயல் இயக்குநராக இருந்தவர் அவர் இருந்திருக்கிறார். பொறுப்பேற்றுக் கொண்ட பிரபு சங்கருக்கு பல்வேறு துறை அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் பிரபு சங்கர் கூறியதாவது: திருக்குறளுடன் துவங்கி, எல்லோருக்கும் எல்லாமும் என்பதன் அடிப்படையில் பணியாற்றுவேன். தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவது நன்மை அளிக்கிறது.
எனவே அனைவரும் அரசின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மாவட்டத்தில் வனங்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. அவற்றை அதிகரிக்க அதிக மரங்கள் நட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.