ஈரோடு கிழக்கு…! அந்த 2 பேர்…? எடப்பாடி அடித்த ‘டிக்’…!
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக இருவர் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜனவரி 4ம் தேதி தமிழக அரசியல் களத்தின் சோகமான நாள். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமானார். அரசியல் கட்சிகள் அதிர்ந்து போன இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
தலைமை தேர்தல் ஆணையமும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவு, மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ள நிலையில் அந்த தொகுதியில் யார் வேட்பாளராக இருப்பார் என்று பேச்சு அதிமுக கூட்டணியில் எழுந்து உள்ளது.
இந்த தொகுதி கடந்த முறை கூட்டணி கட்சியான தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது அப்படியே ஒதுக்கப்படுமா என்று தெரியவில்லை. ஆனால் பாஜகவின் கணக்கோ வேறாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தேர்தல் தேதி அறிவிப்பி ஒரு பக்கம் இருக்கும் நிலையில், இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க 14 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்து உள்ளது. ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வேதானந்தம், எம்எல்ஏ சரஸ்வதி ஆகியோரும் உள்ளனர்.
தேர்தல் பணிகளை இந்த குழு ஒருங்கிணைக்கும் என்ற நிலையில், தொகுதி எந்த கட்சிக்கு என்ற மெகா கேள்வி அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது. கடந்த முறை தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால் இம்முறை அதிமுகவே களம் இறங்கும் என்று தெரிகிறது. பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணிகளை அக்கட்சி தொடங்கி விட்டாலும் யார் வேட்பாளர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சைலண்ட மோடில் எடிப்பாடி பழனிசாமி இருந்தாலும் 2 பெயர்களை டிக் செய்து வைத்துள்ளாராம்.
ஒருவர் மாசெ.வும், முன்னாள் அமைச்சருமான கேவி ராமலிங்கம், மற்றொருவர் முன்னாள் எம்எல்ஏ ஏகேஎஸ் தென்னரசு. அதிமுக நேரடியாக போட்டியிட்டு, வெற்றியை பறித்துவிட்டால் அதிமுகவில் தம்மை யாரும் இனி எக்காரணம் கொண்டும் அசைக்க முடியாது என்று எடப்பாடி தரப்பு ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், கூட்டணி கட்சியில் ஒன்றான தமாகா தொகுதியை கேட்டு வருவதாக தெரிகிறது. ஆனால் அதை அதிமுக தரப்பு பெரிதா பொருட்படுத்தப்படவில்லை என்று தெரிகிறது.
அதே நேரத்தில் தமிழக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள், அறிக்கைகள், போராட்டங்கள் என எதிர்க்கட்சியாக நினைத்து செயல்படும் பாஜகவே களம் இறங்க வேண்டும் என்பது அக்கட்சி நிர்வாகிகள் தலைமையை வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. அதன் முன்னோட்டம் தான் 14 பேர் கொண்ட குழு என்றும் கூறப்படுகிறது. ஆனால் அது எந்தளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்பது தெரியவில்லை. எப்படியாவது, பாஜக களம் இறங்க வேண்டும் என்பது அக்கட்சி மூத்த நிர்வாகிகளின் முக்கிய கருத்தாக பார்க்கப்படுகிறது.