ரத்தாகிறது பிளஸ் 2 தேர்வுகள்…? மாற்று திட்டம் குறித்து ஆலோசனை…!
டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துவிடலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் கொரோனாவின் கோரப்பசி இப்போது அடங்காது என்பது கடந்த சில நாட்களாக பதிவாகும் பாதிப்புகளில் இருந்து உணர முடிகிறது. மருத்துவமனைகள், அதனை தொடர்ந்து சுடுகாடுகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. நாடு முழுவதும் பெரும் அபாயத்தை சந்தித்து வரும் இத்தருணத்தில் பல மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந் நிலையில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் அதை ரத்து செய்துவிடலாமா என்று மத்திய அரசு விவாதித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தேர்வை நாடு முழுவதும் 12 லட்சம் மாணவர்கள் எழுத பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே பிராக்டிகல் எக்சாம் எனப்படும் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு விட்டது. இன்னும் எழுத்து தேர்வு தான் பாக்கி.
இந்த எழுத்து தேர்வை மே 4ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை நடத்தலாம் என்று மத்திய அரசு திட்டமிருந்தது. ஆனால் கொரோனா கோரத்தாண்டவம் அடங்காததால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு, 10ம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
தற்போது 12ம் வகுப்பு தேர்வுகளையும் ரத்து செய்துவிடலாமா என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. மாணவர்களை காப்பாற்ற தேர்வுகளை ரத்து செய்வதுதான் ஒரேவழி என்று பெற்றோர்கள் தரப்பில் இருந்தும் மத்திய அரசும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு உள்ளன. ஒரு வேளை தேர்வு ரத்து செய்யப்படும் பட்சத்தில் மாற்று ஏற்பாடுகள் அல்லது மாற்று மதிப்பீட்டு திட்டம் ஒன்றை தயாரித்து அதன் அடிப்படையில் கிரேடு நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.