Sunday, May 04 12:28 pm

Breaking News

Trending News :

no image

உயிரினும் மேலான பாட்டாளிகளே… பிறவி குணத்தை நிரூபிங்க.. தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்


சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தங்களை நிரூபிக்கும் வகையில் பாட்டாளி சொந்தங்கள் பணியாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டு உள்ளார்.

பா... நிறுவனர் ராமதாஸ், தமது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளதாவது:

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைமுறைகள் நிறை வடைந்து, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பரப்புரை என்ற அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்து இருக்கிறோம்.

களத்தில் இருப்பை உறுதி செய்துள்ள நாம், அடுத்து வெற்றிகளை அறுவடை செய்வதற்கான சாகுபடி காலம் தான் இந்த பரப்புரை காலம் ஆகும். உன்னால் முடியும்... நீ சாதிப்பாய் என்ற உண்மையை உனக்கு உணர்த்துவதற்காகத் தான் எனது உயிரினும் மேலான பாட்டாளிகளுக்கு இந்த மடலை வரைகிறேன்.

நாடாளுமன்ற ஜனநாயகம், சட்டமன்ற ஜனநாயகம் ஆகியவற்றை விட உள்ளாட்சி ஜனநாயகம் தான் மிகவும் வலிமையானது என்பதில் பா... உறுதியாக உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, வாக்குப்பெட்டிகளை மாற்றுவது, வெற்றி பெற்ற வேட்பாளரை தோல்வியடைந்ததாகவும், தோல்வி அடைந்த வேட்பாளரை வெற்றி பெற்றதாகவும் அறிவிப்பது போன்ற ஜனநாயகப் படுகொலைகள் பலமுறை நடந்துள்ளன. இப்படி செய்வதன் மூலம் தமிழகத்தை ஆளும் கட்சிகள் தங்கள் வலிமையை குறுக்கு வழியில் நிரூபிக்கும்.

வேட்பாளர்களை பணத்தால் அடிக்கும் வித்தையும் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. தங்களின் செல்வாக்கு மீதும், மக்கள் மீதும் நம்பிக்கையற்றோர் நடத்தும் இத்தகைய தாக்குதல்களில் ஜனநாயகம் தப்பிப்பிழைக்குமா? என்ற ஐயம் எழுந்திருக்கிறது.

ஆனால், இந்த அடக்கு முறைகளுக்கு அப்பாற்பட்ட கட்சி தான் பாட்டாளி மக்கள் கட்சி. சமூகநீதிக்காக 1980-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம், 1989-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி பா... தொடங்கப்படும் வரை, சந்திக்காத அடக்குமுறைகள் எதுவுமில்லை.

நன்கு முற்றிய நெல் மணிகளுக்கு நடுவே தவிர்க்கவே முடியாத சில பதர்களும் இருப்பது வாடிக்கை தானே. நம்மிலும் பல பதர்கள் உள்ளன. அதை நானும் நன்றாக அறிவேன். அத்தகைய பதர்களுக்கு கட்சியில் இடமில்லை. கட்சிக்கு துரோகம் செய்த சிறுநரிகளுக்கும் கட்சியில் இடமில்லை. சிங்கங்களும், சிறுநரிகளும் ஒன்றாக வாழ முடியாது; நெல்மணிகளின் மூட்டையில் பதர்களுக்கு இடமில்லை.

நெல்மணிகளை புடைக்கும் போது பதர்கள் பறந்து போய்விடும். சிறுநரிகளின் முகத்திரை விலகும் போது அவற்றை சிங்கங்கள் விரட்டியடித்து விடும். இவை அனைத்தும் இன்னும் சில நாட்களில் செய்து முடிக்கப்பட்டுவிடும்.

இந்தப் பணிகளை எல்லாம் செய்து முடிக்க வேண்டியது கட்சித் தலைமையின் பணி. அதை கட்சித் தலைமை கவனித்துக் கொள்ளும். பாட்டாளியான நீ செய்ய வேண்டியது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நமது வேட்பாளர்களின் வெற்றிகளை உறுதி செய்ய உழைப்பது தான்.

உள்ளூர் மக்களின் தேவைகள் என்ன? என்ப தும், அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளும் உனக்குத் தெரியும். அவற்றை மக்களிடம் எடுத்துக் கூறினாலே, அவர்களின் ஆதரவைப்பெற்று வெற்றியைக் கைப்பற்றி விட முடியும்.

பா...தான் மக்கள் பிரச்சினைகளுக்கான முதன்முதலில் குரல் கொடுக்கும் கட்சி என்ற உண்மையையும், பாட்டாளி மக்கள் கட்சியால் தான் மக்கள் நலன் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கின்றன என்பதையும் மக்களிடம் எடுத்துக் கூறி மாம்பழத்திற்கு வாக்கு கேளுங்கள்.

தடைகளை தகர்ப்பதும், அடக்குமுறைகளை உடைப்பதும் நமது பிறவி குணங்கள். எனவே, அனைத்து முட்டுக்கட்டைகளையும் நொறுக்கித் தள்ளி மக்களிடம் செல்லுங்கள்அவர்களின் மனங்களை வெல்லுங்கள். மாம்பழம் சின்னத்தில் வாக்குகளை அள்ளுங்கள். நகர்ப்புறங்களும் நமதே என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் பணியாற்றும்படி பாட்டாளி சொந்தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று ராமதாஸ் கூறி உள்ளார்.

Most Popular