Sunday, May 04 11:45 am

Breaking News

Trending News :

no image

பெரிய தப்பு பண்ணிட்டீங்க எடப்பாடி…! பறிபோன வாய்ப்பு


சென்னை: நல்ல அருமையான வாய்ப்பு, ஆனா அதை அழகா பயன்படுத்தாம கோட்டை விட்டீங்களே எடப்பாடி என்ற குரல் அதிமுக மட்டுமல்ல, ஆளும்கட்சி எதிர்ப்பாளர்களிடம் இருந்தும் வெளிப்பட்டு உள்ளது.

2015ம் ஆண்டை விட கர்ண கொடூரம்… இப்படித்தான் சென்னையை புரட்டிய மிக்ஜாம் புயல், மழை பாதிப்பை வர்ணிக்க வேண்டி இருக்கிறது. எங்கே ஏதோ ஒரு மூலையில் நடந்த நிகழ்வல்ல… பாலுக்கும், தண்ணீருக்கும் முண்டியடித்து கொண்டு ஓடிய மக்கள், காப்பாத்துங்க, பசிக்குது என்று கதறும் மக்கள் என சென்னையின் நிலைமை மழை, வெள்ளத்தால் மாறியே போய்விட்டது.

மழைவிட்டு விட்ட போதிலும், அதன் தாக்கம் வெள்ளமாய், தண்ணீராய் மக்களை தாளித்து வருகிறது. சென்னையின் முக்கிய நகர்பகுதிகள், மக்கள் அடர்வு அதிகம் உள்ள இடங்கள் இன்னும் சகஜ நிலைக்கு வரவில்லை.

ஆளும் திமுக அரசு என்ன செய்தது என்ன மக்கள் போட்டு தாக்கி கொண்டே இருக்க, எதிர்க்கட்சி அதிமுக ரியாக்ஷன் என்ன? என்று ஒரு பக்கம் கேள்விகள் வர ஆரம்பித்துள்ளன. எப்போது வாய்ப்பு கிடைக்கும்? ஸ்கோர் செய்யலாம் என்று காத்திருக்க வேண்டிய அதிமுக, கோட்டை விட்டுவிட்டதாக கூறுகின்றனர் அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்கள்.

அவர்கள் சுட்டிக்காட்டும் விஷயம் இதுதான்: மழை, வெள்ளத்தால் சென்னை மக்கள் படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. அமைச்சர்களின் தொகுதிகள், திமுக முக்கிய பிரமுகர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள், கவுன்சிலர்களின் செயல்பாடுகள் என பம்பரமாய் சுழன்று அதிமுக களப்பணி ஆற்றி இருக்க வேண்டும். 

சாப்பாடு, பால், தண்ணீர், தங்க இடம் இன்றி சாக்கடை கழிவுகளாக, ஆறாய்  மாறிப்போய் காட்சியளிக்கும் வீடுகளில் மக்கள் கதறி வருகின்றனர். ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே வலம் வருகிறார், எடப்பாடி ஒரு நாள் மட்டுமே வேட்டியை மடித்துக் கொண்டு வெள்ள சேதத்தை பார்த்துவிட்டு பேட்டி  கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

அதிமுக முன்னாள் மேயர், முன்னாள் கவுன்சிலர்கள் எங்கே? சென்னையின் விஐபி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் எங்கே? பாதிக்கப்பட்ட எத்தனை பகுதிகளுக்கு அவர்கள் சென்றிருக்கின்றனர்? நடக்கும் காட்சிகளை பார்த்தால் அதிமுக களப்பணியாற்றி ஸ்கோர் செய்யவில்லை.

இதற்கு ஒரு முக்கிய உதாரணமாக நிகழ்ச்சி ஒன்றை சுட்டிக்காட்டுகின்றனர். ஈரோட்டில், செயல்படும் கல்வி நிறுவனங்களின் ஒன்றான துரைசாமி கவுண்டர் நூற்றாண்டு விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, தங்கமணி என பெரும் பட்டாளமே சென்றிருக்கிறது. மக்கள் இங்கு கதறிக் கொண்டு இருக்கின்றனர்? ஆளுங்கட்சி ஆமையாக பணிகள் செய்து கொண்டிருக்கிறது? இப்பேர்ப்பட்ட வாய்ப்பு பயன்படுத்தி அரசின் லட்சணம் இதுதான் என்று படம்போட்டு காட்டியிருக்க வேண்டும்.

ஆனால் எதையுமே அதிமுக செய்த மாதிரி தெரியவில்லை. பாஜகவினர் செய்து வரும் பணிகளை கூட அதிமுக செய்யவில்லை. எதிர்க்கட்சி என்றால் ஆளும்கட்சி செய்ய தவறிய அல்லது தவறாக செய்ததை சுட்டிக்காட்டி மக்கள் சேவை செய்ய வேண்டும்… அதை கோட்டைவிட்டு விட்டது…!

கிடைத்த அரிய வாய்ப்பை மக்களுக்கான நல்ல முறையில் கையாண்டு இருக்க வேண்டும். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ள நேரத்தில் கோட்டைவிட்டு விட்டது அதிமுக என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்…!

Most Popular