கமலின் 1000 ரூபாய் பஞ்சாயத்து…! டுவிட்டரில் ரவுண்டு கட்டும் ரசிகர்கள்
சென்னை: மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் என்பது தமது திட்டம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
சட்டசபையில் 2023-2024ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த அறிக்கையில், தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை தரப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
இந்த தொகையை பெறுவதற்கான வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிடும் என்றும், பட்ஜெட்டில் 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. திட்டத்துக்கான தகுதிகள் என்பது பற்றிய வெளியான செய்திகளுக்கு பாராட்டும், விமர்சனங்களும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது.
அதே நேரத்தில் உரிமை தொகை திட்டத்தை முதன் முதலில் இந்தியாவில் முன் எடுத்தது மக்கள் நீதி மய்யம் என்று அதன் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார். திட்டத்தை வரவேற்று அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் இவ்வாறு கூறி உள்ளார்.
அவர் தமது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி @maiamofficial.
புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் @CMOTamilnadu அவர்களைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது என கூறி உள்ளார்.
கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவை கண்ட பலரும் பல்வேறு விதமாக விமர்சித்து வருகின்றனர். குடும்ப வாழ்க்கையில் தோல்வி கண்ட அவர், மனைவிகளுக்கு ஜீவனாம்சம் தந்தாரா? நீங்கள் இன்னமும் தமிழக அரசியலில் இருக்கிறீர்களா? என டிசைன், டிசைனாக விமர்சனங்கள் அணிவகுத்து வருகின்றன.