கிணத்தை காணோம் நடிகர் திடீர் மறைவு…! திரையுலகம் ஷாக்…
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார். அவருக்கு வயது 69.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறியப்பட்டவர் நெல்லை சிவா. நெல்லை தமிழில் பேசி படங்களில் அசத்துவார். 1985ம் ஆண்டு ஆண்பாவம் படத்தில் நடிகராக அறிமுகமானார்.
அந்த படத்தில் பொட்டி வரல என்று அவர் பேசுவது முதல் வசனம். நடிகர் சிவாஜியின் பரம ரசிகர் நெல்லை சிவா. சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் காரணமாக சொந்த ஊரில் இருந்து தலைநகர் சென்னை வந்தார்.
தொடக்கம் முதலே சில காட்சிகளில் வலம் வந்த அவர், பின்னர் தமது நெல்லை தமிழில் பேசி கலக்க, தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடனான படத்தில் நடித்து புகழ் பெற்றார்.
குறிப்பாக நடிகர் வடிவேல் படத்தில் கிணத்தை காணோம் என்று நெல்லை சிவா பேசும் வசனம் ஏக பிரபலம். தமிழ் சினிமாவில் நெல்லை தமிழில் பேசி நகைச்சுவையை அறிமுகம் செய்தவர் என்ற பெருமையை பெற்றவர் நெல்லை சிவா. தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்து வந்தார்.
இந் நிலையில் மாரடைப்பால் இன்று மாலை 6.30 மணியளவில் அவர் திடீரென காலமானார். நெல்லை மாவட்டம் பணகுடியில் அவரது இறுதி சடங்ககுகள் நாளை நடக்க உள்ளது. அவரது மரணம் திரையுலகத்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.