பாஜகவை ஜெயிக்க வைக்க கமல் செய்த வேலை…? கடுப்பில் திமுக…!
சென்னை: கோவை தெற்கு தொகுதியில் பாஜகவுக்கு வெற்றியை தேடி தரவே கமல் களம் இறங்கி உள்ளதாக ஒரு பேச்சு எழு திமுக கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் கட்சியை அறிவித்து களத்தில் இறங்கியவர் கமல். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை யாரும் சீந்தாத நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
அப்போதே அவர் பாஜகவின் பி டீம் என்று ஒரு பேச்சு எல்லா பக்கமும் உலவியது. அதன் பின்னர் ஏதேனும் ஓரு கூட்டணியில் ஐக்கியமாகி விடுவார் பாஜகவுடன் செல்வார், காங்கிரசுடன் பேசி கொண்டிருக்கிறார்,உதயநிதியை சந்தித்தார் என்று எல்லாம் பேச்சுகள் ஓடின.
எதை பற்றியும் கவலைப்படாமல் அவர் ஒரு தனி அணி அமைக்க முயற்சியில் இருந்ததை யாரும் அறியவில்லை. ஆனால் எந்த பெரிய கட்சியும் மநீமவை ஏற்காத நிலையில் தனித்து போட்டி தான் என்ற தருணத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து கைகொடுத்தார் சமகவின் சரத்குமார்.
யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் தமது தலைமையில் ஒரு கூட்டணி அறிவித்த கமல்ஹாசன் சென்னை அல்லது கோவையில் களம் காண்பார் என்று பேச்சுகள் ஓடியது. சென்னையில் தான் என்று அனைவரும் அடித்து கூறிக் கொண்டிருக்க கோவை தெற்கை டிக் செய்திருக்கிறார் கமல்.
அதற்கான காரணம் இப்போது தொண்டர்கள் மத்தியில் வேறு ஒரு பேச்சை எழுப்பி இருக்கிறது. சென்னை, பரமக்குடி என தொகுதிகள் கணிப்பு வெளியாகி கொண்டிருக்க கோவை தெற்கை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதற்கான காரணமும் மெல்ல, மெல்ல வெளியாகி உள்ளது.
பாஜகவை ஜெயிக்க வைப்பதற்காகவே கோவை தெற்கில் அவர் போட்டியிடுகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து கோவை மாவட்ட திமுகவினர் கூறி இருப்பதாவது:
இதே தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஜெயிக்க வைக்கவே அக்கட்சியின் ஏற்பாட்டின் பேரில் கோவை தெற்கில் கமல் போட்டியிடுகிறார். இந்த தொகுதியை திமுகவானது காங்கிரசுக்கு விட்டு கொடுத்திருக்கிறது. சிறுபான்மையினர் வாக்குகள், அரசு ஊழியர்களின் வாக்குகள், திராவிட கட்சிகள் மீதான அதிருப்தி வாக்குகள் அனைத்தும் தமக்கு வந்துவிடும் என்று கமல் நினைக்கிறார்.
ஆனால் அவர் நினைப்பது எதுவும் நடக்காது. அம்மன் அர்ஜூனன் தொகுதியை பாஜகவுக்கு தாரை வார்த்ததால் அதிமுகவினர் பாஜக மீது காண்டில் உள்ளனர். ஆகையால் இம்முறை அதிமுகவின் பெரும்பாலான ஓட்டுகள் அமமுக வேட்பாளர் சேலஞ்சர் துரைக்கு தான் போகும். இல்லாவிட்டால் கமல் கட்சிக்கு விழும். காங்கிரஸ் வேட்பாளரான மயூரா ஜெயக்குமாருக்கு தேவர் சமுதாய வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக வந்து சேரும்.
திமுக, காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் வாக்குகள் விழுவதால் காங்கிரஸ் வென்றுவிடும். இப்போது போட்டியே காங்கிரசுக்கும், கமலுக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த தகவல்களை மறுக்கும் மக்கள் நீதி மய்யத்தினர் கமல் தான் இங்கு களம் காண்கிறார் என்னும் போதே எங்களுக்கான ஆதரவு குவிகிறது. இங்கு போட்டியே இப்போது பாஜகவுக்கும், கமலுக்கும் தான் என்று புது கோணத்தை தெரிவித்துள்ளனர். பார்ப்போம்… மக்கள் யாருக்கு யாருக்கு ஆதரவு தருகிறார்கள் என்று…?