இதுதான் கலிகாலம்..! அதிமுகவில் சேர சசிகலாவுக்கு முன்னாள் அமைச்சர் 'கண்டிஷன்'
சென்னை: ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை சந்தியுங்கள் என்று சசிகலாவுக்கு முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கண்டிஷன் போட்டுள்ளார்.
அதிமுகவில் நிகழும் பஞ்சாயத்து எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. இரட்டை தலைமை ஒரு பக்கம் இருக்க… மறுபக்கம் சசிகலாவின் என்ட்ரி இருக்குமா? என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது.
இபிஎஸ், ஓபிஎஸ் இருவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சசிகலாவின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆதரவா? எதிர்ப்பா? என்ற தெரியாத நிலையில் ஓபிஎஸ் எதிர்ப்பு நிலை என்பது இன்று வெளிப்படுத்தி உள்ளார்.
இந் நிலையில், சசிகலா அதிமுகவுக்கு வரவேண்டும் என்றால் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் சந்திக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் புது யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: கட்சியை மீட்பேன் என்று சசிகலா கூறி வருவது தேவையில்லாத ஒன்று. கட்சியை இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் மீள் உருவாக்கம் செய்துள்ளனர்.
அதிமுகவில் இப்போது காலி இடம் இல்லை. சசிகலா அதிமுகவில் மீண்டும் வர வேண்டும் என்றால் ஓபிஎஸ், இபிஎஸ் 2 பேரையும் சந்தித்து பேச வேண்டும்.
தமிழக அரசியல் சுழல் என்பது அதிமுக, திமுக என்றுதான் சுற்றும். அதில் மாற்றுகருத்தே இல்லை. அதிமுக வலிமை திமுகவுக்கு நன்றாக தெரியும். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.
சார்பட்டா பரம்பரை படத்தில் எம்ஜிஆர், அவரது ரசிகர்களை உண்மைக்கு மாறாக சித்திரிக்கப்பட்டு உள்ளது. இது மிகுந்த வருத்தமானது என்று கூறினார்.