உங்கப்பன் வீட்டு காசா..? மத்திய அமைச்சரை ‘கும்மிய’ உதயநிதி
சென்னை: வெள்ள நிவாரண நிதி குறித்து மத்திய அமைச்சரின் கருத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில் தான் ஏக வைரலாகி இருக்கிறது.
தமிழகம் இதுவரை காணாத மழை வெள்ள பாதிப்பு மிக்ஜாம் புயலால் ஏற்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அதிலும் சென்னை புறநகர் பகுதிகளில் மக்களின் நிலைமை ரொம்ப மோசம் என்றே சொல்லலாம்.
தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டே இருந்தாலும், பாதிப்பின் கோரம் அதிகம் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து. எவருக்கு எந்த உதவியும் கிடைக்காமல் இருக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கம் என்ற நிலையில், தமிழக அரசின் செயல்பாட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
தமிழக அரசு கேட்ட நிவாரண நிதியை தருவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. கொடுத்த நிதி பற்றியும் விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில் மத்திய அமைச்சரின் ஒரு கருத்து தமிழக அரசியலில் புயலை கிளப்பி இருக்கிறது.
செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வியை எதிர்கொண்ட போது மத்திய அரசு என்ன ATM மா..? கேட்டவுடன் காசு கொடுப்பதற்கு என்று பதில் வந்திருக்கிறது. இந் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மத்திய அமைச்சரின் இந்த கருத்தை செய்தியாளர்கள் பகிர்ந்தனர். இது குறித்து பதில் என்ன என்று கேட்ட போது அவர் கூறியதாவது:
நாங்க என்ன அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்டோம்? தமிழக மக்கள் கொடுத்த வரிப்பணம் தானே என்று சூடாக பதிலடி கொடுத்துள்ளார்.
அவரின் இந்த கோபம் + ஆதங்கம் இரண்டும் முகத்திலும் தெளிவாக வெளிப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேட்டி திமுக தகவல் தொழில்நுட்ப அணியால் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
அவரின் கோபம் நியாயம் என்றும், மத்திய அரசின் பாராமுகத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அதே நேரத்தில் 4000 கோடி ரூபாயை மையப்படுத்தியும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
அந்த வீடியோ இந்த செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.