கிளம்பிட்டாய்ங்க…! ஸ்டிக்கர் அரசியலை ஆரம்பித்த பாஜக…!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான போஸ்டரில் பிரதமர் மோடியின் போட்டோவை ஒட்டும் வேலையை பாஜக தொடங்கி இருக்கிறது.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட்ட போட்டி நாளை சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. அடுத்த மாதம் 10ம் தேதி வரை இந்த தொடர் நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட 187 நாடுகளை சேர்ந்த சர்வதேச வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
தொடரின் தொடக்க விழா நாளை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டு துவக்கி வைக்கிறார். கிட்டத்தட்ட ஒரு வாரமாகவே தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் செஸ் பற்றிய பேச்சுகள் ஓடிக் கொண்டு இருக்கின்றன.
அது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பாடல்கள் என களைகட்டி வரும் நிலையில் பாஜக வழக்கம் போல் ஸ்டிக்கர் அரசியலை ஆரம்பித்து வைத்திருக்கிறது. சென்னையின் பல்வேறு இடங்களில் ஒலிம்பியாட் போட்டிக்கான போஸ்டர்களில் பிரதமர் மோடி படம் இல்லை.
இதையடுத்து, பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு திறன் அணித் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி பிரதமர் மோடியின் படத்தை எடுத்து கொண்டு ஆதரவாளர்கள் சிலருடன் அரசு விளம்பர போஸ்டரில் ஒட்டி வருகிறார். இந்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
சமூக வலைதளங்களில் அவரின் இந்த வீடியோவை அதிகம் பேர் பார்த்து பகிர்ந்தாலும் கூடவே எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. அதிமுகவின் கூட்டாளி என்பதால் அவர்கள் ஆரம்பித்து வைத்த ஸ்டிக்கர் அரசியல் பாஜகவையும் தொற்றி கொண்டுவிட்டது என்று கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. அதை தமிழக அரசு சொந்த செலவில் எடுத்து நடத்தி வரும் நிலையில் பாஜகவின் இந்த ஸ்டிக்கர் அரசியல் இப்போது அவர்களுக்கு எதிராகவே திரும்பி இருக்கிறது.
எங்கெல்லாம் பிரதமர் மோடி படம் ஒட்டப்பட்டு இருக்கிறதோ, அங்கெல்லம் தபெதிகவினர் பின்னாடியே சென்று அந்த படத்தை கறுப்பு ஸ்பிரே அடித்து அழித்து வருகின்றனர். இங்கே பாஜக ஒட்ட, ஒட்ட… அங்கே பின்னாடியே தபெதிகவினர் கங்கணம் கட்டிக் கொண்டு அழித்து வருகின்றனர்.