Sunday, May 04 12:42 pm

Breaking News

Trending News :

no image

5 மாசம் தான்…. திமுக ஆட்சி கலைஞ்சிடும்….!


சென்னை: 5 ஆண்டுகள் இருக்க வேண்டிய திமுக ஆட்சி 5 மாதத்தில் முடிவுக்கு வந்துவிடும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கட்சிகளில் ஒன்று புதிய தமிழகம். அண்மைக்காலமாக திமுக மற்றும் அதன் தலைமை பற்றியும் எதுவும் கருத்து கூறாமல் இருந்த கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இப்போது ஒரு அறிக்கை விட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

அந்த அறிக்கையில் திமுக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காமல், 5 மாதங்களில் கலைந்து விடுமோ என்று சந்தேகம் வந்துவிட்டதாக கூறி உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை விவரம் வருமாறு:

அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தன்னுடைய அறிவுத்திறமையை பயன்படுத்தி, தமிழகத்திற்கு வரவேண்டிய 12,000 கோடி ரூபாயை போராடிப் பெற்றுத் தந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

ஆனால் அதைவிடுத்து மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பிணக்கை உண்டாக்கும் கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார். திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் மத்திய அரசை ”ஒன்றிய அரசு” எனக் குறிப்பிடுவதும், ”திராவிட நாடு” என்ற பிரிவினை முழக்கமும் உள்ளடக்கத்தில் ஒன்றே அன்றி வேறு வேறு அல்ல.

ஏற்கெனவே ”பிரிவினை வாதம்” பேசி 1976, 1990 களில் ஆட்சியை இழந்தது அவர்களுக்கு நினைவில் இல்லாமலா போய்விடும்? இது தொடர்ந்தால் ஐந்து வருடத்திற்குப் பிறகு முடிவுக்கு வரவேண்டிய ஆட்சி ஐந்தே மாதத்தில் முடிவுக்கு வந்துவிடுமோ என்ற சந்தேகம் எழுகிறது.

இனியாவது திமுக மற்றும் அதன் அடிவருடிகள் இந்திய அரசியல் சாசனத்தின் அருமை, பெருமைகளைத் தெரிந்து செயல்பட வேண்டும். இறையாண்மை மிக்க இந்தியப் பேரரசை ”ஒன்றிய அரசு” எனத் தொடர்ந்து அழைப்பது எட்டுகோடி தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதற்கும், 140 கோடி இந்திய மக்களைச் சீண்டிப் பார்ப்பதற்கும் சமமானதும், சட்டவிரோதமானதும், தேசவிரோதமானதும் ஆகும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.

Most Popular