ஆடு மேய்ந்த விவகாரம்..! பட்டியலின முதியவரை காலில் விழச் செய்த ஆதிக்க சாதியினர்!
தூத்துக்குடி: கயத்தாறு அருகே ஆதிக்க சமூகத்தினரின் ஆட்டு பட்டியில் ஆடு சென்றதால் பட்டியலினத்தை சேர்ந்தவரை காலில் விழ வைத்த கொடூரம் அரங்கேறி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஓலைக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இவர் 100 செம்மறி ஆடுகளை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது ஆடு பக்கத்தில் ஆடு வைத்திருக்கும் சிவசங்கு தேவர் என்பவரின் ஆட்டு பட்டிக்கு சென்றிருக்கிறது.
உடனே சிவசங்கு அவரது உறவினர்களை அழைத்து பால்ராஜை காலில் விழுந்து கும்மிட செய்துள்ளார். மேலும் இதனை வீடியோ எடுத்து அவர்களின் உறவினர்களின் உதவியோடு சமூக வலைதளங்களிலும் பரப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பால்ராஜ் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனு அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து, சிவசங்கு, சங்கிலிபாண்டி, உடையம்மாள், பெரியமாரி, வீரையா, மகேந்திரன், மகாராஜன் உள்ளிட்ட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.