கொரோனா பரிசோதனை செய்யணுமா..? ஆதார் இருக்கா..? அதிரடி காட்டிய ராஜஸ்தான்
ஜெய்ப்பூர்: கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமானால் ஆதார் அட்டை கட்டாயம் என்று ராஜஸ்தான் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதுமே கொரோனாமயமாகவே உள்ளது. எந்த மாநிலத்தில் பார்த்தாலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.
6 முறை ஊரடங்கு அமல்படுத்தியும் இந்த கொரோனா அலை ஓயவில்லை. அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து வருகின்றன.
கொரோனா பரிசோதனைக்கு வரும் நபர்கள், உண்மையான முகவரியை கொடுப்பதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இந் நிலையில், ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை புதிய வழி காட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கொரோனா சோதனை செய்யப்படும் நபர் ஆதார் அட்டை எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது இப்போது கட்டாயமாக்கப்பட்டது. சோதனைக்கு வருபவருக்கு ஆதார் இல்லை என்றால் குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் ஆதார் அட்டை காட்டி பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இந்த வழிகாட்டுதல்களின்படி, ஆய்வகங்கள் 24 மணி நேரத்திற்குள் முடிவுகளை அளிக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் மொத்தம் 35,298 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.613 பேர் உயிழந்துள்ளனர்.